ஊரடங்கால் சம்பங்கி பூ விலை வீழ்ச்சி


ஊரடங்கால் சம்பங்கி பூ விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 13 Jun 2020 11:16 AM IST (Updated: 13 Jun 2020 11:16 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் சம்பங்கி பூ விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆதனக்கோட்டை, 

புதுக்கோட்டை வட்டாரத்தில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 25 எக்டேரில் சம்பங்கி சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக வடவாளம் ஊராட்சியில் அதிகமான விவசாயிகள் சம்பங்கி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு ஏக்கர் சம்பங்கி பயிர் செய்ய உழவு, தொழுஉரம், சம்பங்கி கிழங்குவிதை, வேலையாட்கள், சொட்டு நீர் விசைத்தெளிப்பான் மூலம் தண்ணீர் பாய்ச்சுதல் போன்றவற்றுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவாகும். ஒரு முறை பயிர் செய்தால் 3 ஆண்டுகள் வரை நல்ல விளைச்சல் கிடைக்கும். ஒரு சில விவசாயிகள் 5 ஆண்டு வரை கூட சம்பங்கியை பராமரித்து, அதன்மூலம் மகசூல் பெறுகின்றனர்.

சம்பங்கி மூன்றில் இருந்து நான்கு மாதங்களில் பூக்கத் தொடங்கினாலும் ஆறு மாதத்திற்கு பிறகு நல்ல மகசூல் கிடைக்க தொடங்கும். ஒரு ஏக்கரில் நாளொன்றுக்கு 50-ல் இருந்து 60 கிலோ வரை பூக்கள் கிடைப்பதால் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை விலைபோகும். சாகுபடிக்கு ரூ.1½ லட்சம் வரை செலவானாலும், ரூ.1½ லட்சம் வரை லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். திருவிழாக்கள், திருமண விழாக்கள் போன்ற விசேஷ நாட்களில் பூச்சந்தைகளில் கிலோ 200 ரூபாய்க்கு மேல் விலைபோகும் சம்பங்கி பூ, சாதாரண நாட்களில் ரூ.100 முதல் ரூ.120 வரை சந்தைகளில் விற்பனையாகும்.

விலை வீழ்ச்சி

ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் பல்வேறு திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதாலும், சுபகாரியங்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடப்பதாலும் சம்பங்கி பூ விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.20 முதல் ரூ.50 வரையே விற்பனை செய்யப்பட்டது. தற்போது கடந்த 3 நாட்களாக முகூர்த்த நாட்கள் காரணமாக சம்பங்கி பூ கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இருப்பினும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. மேலும் சாதாரண நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சம்பங்கி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளதாக வேதனையுடன் கூறுகின்றனர்.

எனவே சம்பங்கி பூக்களுக்கு நல்ல விலை கிடைக்க, முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து திருவிழாக்களை நடத்தவும், சுப காரியங்களில் அதிகமான நபர்கள் கலந்து கொள்ளவும் அரசு அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், என்று சம்பங்கி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Next Story