சாயர்புரத்தில், 568 பயனாளிகளுக்கு ரூ.3¼ கோடி கடன் உதவி - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


சாயர்புரத்தில், 568 பயனாளிகளுக்கு ரூ.3¼ கோடி கடன் உதவி - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 13 Jun 2020 7:27 AM GMT (Updated: 13 Jun 2020 7:27 AM GMT)

சாயர்புரத்தில் 568 பயனாளிகளுக்கு ரூ.3¼ கோடி கடன் உதவியை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

சாயர்புரம்,

சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன்(ஸ்ரீவைகுண்டம்), சின்னப்பன்(விளாத்திகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து 568 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பில் இருந்து மக்களை மீட்பதற்கு கூட்டுறவுத்துறை மூலம் பல்வேறு கடன் உதவிகளை வழங்குவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். அதன்படி கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பெரியதாழையில் ரூ.52 கோடியே 46 லட்சம் செலவில் தூண்டில் வளைவு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களின் பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்வதற்காக எளிய முறையில் கடன் வழங்குவது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, எளிய முறையில் கடன் உதவிகள் வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் 24 கிளைகளில் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய கூட்டுறவு வங்கியின் 25-வது கிளை விரைவில் கோவில்பட்டியில் திறக்கப்பட்டு அங்குள்ள பொதுமக்களுக்கும் கடன் உதவிகள் வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, முதல் பரிசு பெறும் வகையில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடன் உதவிகளை பெறும் பயனாளிகள் முறையாக பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட கூட்டுறவு வங்கிகளின்் இணை பதிவாளர் கே.சி.ரவிச்சந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை பதிவாளாகள்் சுப்புராஜ், அருள் ஜோசி, ஏரல் தாசில்தார் அற்புதமணி, சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அறவாழி, துணைத்தலைவர் பண்டாரம், கூட்டுறவு சங்க மேலாளர் சகுந்தலாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாறில் ரூ.2 கோடியே 77 லட்சத்து 48 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய தாலுகா அலுவலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ குத்துவிளக்கு ஏற்றினார்.

பின்னர் அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம், மூன்று சக்கர ஸ்கூட்டர், உதவித்தொகை, சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி, அம்மா ஸ்கூட்டர் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மொத்தம் 49 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து கயத்தாறு அருகே திருமலாபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை அமைக்க அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ. தாசில்தார் பாஸ்கரன், யூனியன் ஆணையாளர்கள் சீனிவாசன், சசிகுமார், நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் ஜோதிபாசு, மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினோபாஜி, நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story