புதுவை நவீன சுகாதார மீன் அங்காடியில் மீன்களை ஏலம் விடும் பணி தொடங்கியது
புதுச்சேரி பெரிய மார்க்கெட் பகுதியில் இருந்து நவீன சுகாதார மீன் அங்காடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையொட்டி அங்கு மீன்கள் ஏலம் விடும் பணி தொடங்கியது.
புதுச்சேரி,
புதுச்சேரி நேரு வீதி- மகாத்மா காந்தி வீதியில் குபேர் அங்காடி உள்ளது. இங்கு மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், பழக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் இங்கு வந்து சென்றதால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து மீன் மார்க்கெட் முன்பு மகாத்மா காந்தி வீதி சாலையில் மீன்களை ஏலம் விடுவதை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு நேற்று முதல் இடமாற்றம் செய்து கலெக்டர் அருண் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை மகாத்மா காந்தி வீதியில் உள்ள பெரிய மீன் மார்க்கெட் நுழைவுவாயிலில் இருபுறமும் 100 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நுழைய முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மீன் வியாபாரிகள் வழக்கம்போல மீன்களை ஏலம் விடுவதற்காக வாகனங்களில் மீன்களை அங்கு கொண்டு வந்தனர்.
இதைப்பார்த்ததும் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், இனி மீன்களை இங்கு ஏலம் விடக்கூடாது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன சுகாதார மீன் அங்காடிக்கு கொண்டு சென்று ஏலம் விடும்படி தெரிவித்து அவர்களை அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு மீன் ஏலம் விடப்பட்டது.
முன்னதாக பெரியமார்க்கெட் மொத்த வியாபாரிகளிடம் சப்-கலெக்டர் சுதாகர், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, மீன்வளத்துறை இயக்குனர் முத்து மீனா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன சுகாதார மீன் அங்காடியில்தான் இனி மீன்களை ஏலம் விட வேண்டும். பெரிய மார்க்கெட் அருகே மீன்களை ஏலம் விடக்கூடாது.
அதேபோல் மீன்களை மீன் மார்க்கெட்டில் மட்டும் தான் விற்பனை செய்ய வேண்டும். சாலைகளில் வைத்து விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தினார்கள். விதிகளை மீறினால் பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இதனை வியாபாரிகள் ஏற்றுக்கொண்டனர். இதற்கு சில மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story