கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால் தொற்று அதிகரிப்பு, புதுச்சேரியில் சமூக பரவல் இல்லை - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு முதியவர் நேற்று பலியானார். இதன்மூலம் சாவு 3 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபை வளாகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 84 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கிராமப்புறங்களிலும் கொரோனா பரவி வருகிறது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால் தொற்று பரவி உள்ளது. எனவே மக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். குடும்பத்தில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். சோலை நகர், முல்லை வீதி ஆகிய பகுதியில் ஆய்வு நடத்தினேன்.
சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி மற்றும் பொதுப்பணி உள்பட பல்வேறு துறை ஊழியர்களும் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள். புதுவையில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளியில் இருந்து வருபவர்களிடம் கவனமாக பழக வேண்டும்.
இந்தியாவில் கொரோனா சமூக பரவலில் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது. புதுவையில் தற்போது 84 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை.
2018-ம் ஆண்டு இறுதியில் நான் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியதன் அடிப்படையில் நிதி ஆதாரத்தை கையாளும் அதிகாரத்தை முதல்-அமைச்சர், அமைச்சரவைக்கு மாற்றி வழங்க கோரி கவர்னருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது. ஆனால் அதற்கு கவர்னர் அனுமதி அளிக்கவில்லை.
இதையொட்டி நானும், அமைச்சர்களும் கவர்னர் மாளிகை முன் போராட்டம் நடத்தினோம். அதன்பின் கவர்னர் கிரண்பெடி அழைத்து பேசி நிதி அதிகாரத்தை வழங்குவதாக ஒப்புதல் அளித்தார். ஆனால் அதை அவர் செய்யவில்லை. அதற்கு மாறாக மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அமைச்சரவைக்கும் கவர்னருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. எனவே மத்திய அரசு அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். கவர்னர் எழுதிய கடிதம் தவறான ஒன்று.
தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு நிதியை நிர்வகிக்கின்ற அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதனை அவமதிக்கும் வகையில் கவர்னர் செயல்படுகிறார். ஒவ்வொரு முறையும் கோப்புகள் செல்லும் போது அதில் தேவையில்லாமல் கேள்விகளை கேட்டு முட்டுக்கட்டை போட்டு அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இதனால் அரசின் திட்டங்களை நிறைவேற்ற காலதாமதம் ஏற்படுகிறது. இது மக்கள் அனைவருக்கும் தெரியும்.
புதுவை சிறையில் உள்ள கைதிகள் வெளியில் இருக்கும் தங்கள் கூட்டாளிகளுடன் செல்போனில் தொடர்பு கொண்டு திட்டம் வகுத்து கொடுத்து எதிரிகளை கொலை செய்து வருகின்றனர். சிறையில் இருக்கும் வார்டன்கள் எவ்வளவுதான் கண்காணித்தாலும் ஒரு சிலர் உதவியுடன் கைதிகள் செல்போன்களை பெறுகின்றனர். இதுதொடர்பாக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story