ஊரடங்கால் வெறிச்சோடிய அறிவியல் மையம்


ஊரடங்கால் வெறிச்சோடிய அறிவியல் மையம்
x
தினத்தந்தி 14 Jun 2020 4:00 AM IST (Updated: 14 Jun 2020 1:02 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காரணமாக, மாவட்ட அறிவியல் மையம் வெறிச்சோடி கிடக்கிறது.

நெல்லை,

நெல்லை மாவட்ட அறிவியல் மையம், கொக்கிரகுளத்தில் கலெக்டர் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. இது மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின்கீழ் செயல்படும், தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 27-2-1987 அன்று தொடங்கப்பட்ட இந்த அறிவியல் மையத்தில் ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்பு உபகரணங்களும், பொழுதுபோக்கு, விளையாட்டு சாதனங்களும் உள்ளன.

இங்கு அறிவியல் காட்சியகம், மின்னியல் காட்சியகம், மின்னியலின் புதுச்சிறகு காட்சியகம், டி.வி. ஸ்டூடியோ, வரலாற்றுக்கு முந்தைய பூங்கா போன்றவை உள்ளன. மேலும் இங்கு ஒரு உருவத்தை பல உருவங்களாக பிரதிபலிக்கும் மாயக்கண்ணாடி பகுதியும், வானியலின் அதிசயத்தை காணும் வகையில் தொலைநோக்கிகளுடன் அமைக்கப்பட்ட டிஜிட்டல் பிளானட்டேரியமும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

புதுமையான அனுபவம்

இதேபோன்று முப்பரிமாண காட்சிகளைக் காணும் வகையில் அமைக்கப்பட்ட 3டி திரையரங்கமும் உள்ளது. இங்கு தினமும் காலை 11 மணி, மதியம் 12 மணி, 3 மணி, மாலை 4 மணி, 5 மணி என்று 5 முறை ஆவண படங்கள் திரையிடப்படும். அவற்றை 3டி கண்ணாடிகளை அணிந்தவாறு முப்பரிமாணத்தில் பார்ப்பது புதுமையான அனுபவமாக இருக்கும்.

பொங்கல், தீபாவளி பண்டிகையை தவிர்த்து, ஆண்டு முழுவதும் இந்த அறிவியல் மையம் செயல்பட்டு வந்தது. தினமும் காலை 10.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரையிலும் திறந்து இருக்கும் இந்த மையத்துக்கு ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் என்று குடும்பமாக வருவது வழக்கம்.

பராமரிப்பு பணி

அறிவியல் மையத்தில் நுழைவு கட்டணமாக ரூ.15 வசூலிக்கப்பட்டது. மாணவர்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டது. 3டி திரையரங்குக்கு செல்ல தனி கட்டணம் வசூலிக்கப்பட்டது. நகரின் மையப்பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இந்த அறிவியல் மையத்துக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்வது வழக்கம். வார விடுமுறை நாட்களில் அறிவியல் மைய வளாகத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

மேலும் மாணவர்களுக்கு கல்விக்கூடமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கிய இந்த அறிவியல் மையத்தில் தினமும் கருத்தரங்கம், கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மாவட்ட அறிவியல் மையம் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. அறிவியல் மைய ஊழியர்கள் பராமரிப்பு பணி மட்டும் மேற்கொள்கின்றனர்.

மீண்டும் திறக்க கோரிக்கை

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “நெல்லையில் குடும்பத்துடன் இன்பமாக பொழுதை போக்க கடற்கரையோ, பொழுது போக்கு மையங்களோ கிடையாது. இதனால் இந்த அறிவியல் மையத்துக்குத்தான் நாங்கள் குடும்பத்துடன் வந்து சென்றோம். ஊரடங்கில் வீடுகளில் முடங்கி உள்ள மாணவர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில், மாவட்ட அறிவியல் மையத்தை மீண்டும் திறந்து, அங்கு சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து செல்ல அனுமதிக்க வேண்டும்“ என்றனர்.

மாவட்ட அறிவியல் மைய அதிகாரிகள் கூறுகையில், “ஊரடங்கு தளர்வில், அறிவியல் மையத்தை திறக்க அரசு அனுமதிக்கவில்லை. எனினும் இங்கு தினமும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்து வருகிறோம். விரைவில் அறிவியல் மையத்தை திறக்க அரசு அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்“ என்று தெரிவித்தனர்.

Next Story