திருச்சியில் முக கவசம் அணியாத அரசு பஸ் கண்டக்டர், மருத்துவ கல்லூரி ஊழியருக்கு அபராதம்


திருச்சியில் முக கவசம் அணியாத அரசு பஸ் கண்டக்டர், மருத்துவ கல்லூரி ஊழியருக்கு அபராதம்
x
தினத்தந்தி 13 Jun 2020 10:30 PM GMT (Updated: 13 Jun 2020 7:47 PM GMT)

திருச்சியில் முக கவசம் அணியாத அரசு பஸ் கண்டக்டர், மருத்துவ கல்லூரி ஊழியர் உள்ளிட்டோருக்கு மாநகராட்சி குழுவினர் அபராதம் விதித்தனர்.

திருச்சி,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், கட்டாயம் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் திருச்சியில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல் அலட்சியமாக சுற்றி திரிந்து வருகிறார்கள். ஆகவே முக கவசம் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி கடந்த 4-ந் தேதி முதல் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம், பொன்மலை ஆகிய 4 கோட்டங்களிலும் 50 பேர் கொண்ட மாநகராட்சி குழுவினர் நியமிக்கப்பட்டு, பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

அபராதம் வசூல்

இந்நிலையில் நேற்று பொன்மலை கோட்டத்துக்கு உட்பட்ட மத்திய பஸ் நிலையம் பகுதியில் மாநகராட்சி குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், பஸ் நிலையத்தில் நின்றவர்கள், அரசு பஸ் கண்டக்டர், மருத்துவ கல்லூரி ஊழியர் என ஏராளமானோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதில் முக கவசம் வைத்து இருந்தும் அதை அணியாமல் வந்தவர்களிடம் ரூ.50-ம், முக கவசம் இல்லாதவர்களிடம் ரூ.100-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். கடந்த 4-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்ற சோதனையில் மொத்தம் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story