கரைவெட்டி சரணாலய ஏரியில் பறவைகள் திட்டு அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு


கரைவெட்டி சரணாலய ஏரியில் பறவைகள் திட்டு அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 13 Jun 2020 11:30 PM GMT (Updated: 13 Jun 2020 8:23 PM GMT)

கரைவெட்டி பறவைகள் சரணாலய ஏரியில் பறவைகள் திட்டு அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரைவெட்டி கிராமத்தில் கரைவெட்டி பறவைகள் சரணாலய ஏரி உள்ளது. இந்த ஏரியானது 1100 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்நிலையில் தமிழக அரசானது இந்த பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்தும் பொருட்டு ஏரிக்கு நடுவே ஆங்காங்கே திட்டுகளை ஏற்படுத்தி அதில் மரக்கன்றுகளை வளர்த்து அதில் பறவைகள் தங்குவதற்கு ஏற்ப சூழ்நிலைகளை அமைக்க முடிவு எடுத்து ஏரிகளுக்கு நடுவே திட்டுகளை அமைக்கத் தொடங்கியது.

இதை அறிந்த அப்பகுதியை சுற்றி உள்ள கிராமங்களின் விவசாயிகள் சம்பவ இடத்தில் ஒன்று கூடி கூறுகையில், திட்டுகள் அமைப்பதன் மூலம் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படும். இப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் செய்து வரும் நாங்கள் அனைவருமே இந்த கரைவெட்டி ஏரியின் பாசனத்தை வைத்தே விவசாயம் செய்து வருகிறோம். இதுபோன்ற பறவைகள் திட்டு அமைப்பதன் மூலம் ஏரியின் நீரின் கொள்ளளவு குறைந்துவிடும். எங்கள் விவசாயத்திற்கு நீர் இல்லாமல் ஆகிவிடும். தற்போது வரும் நீர் பாசனத்திற்கு போதாததால் ஏரியை தூர் வாரி ஆழப்படுத்த வேண்டும் என பலமுறை மாவட்ட கலெக்டரிடம் மனுக்களை கொடுத்திருக்கிறோம்.

போராட்டம்

இந்நிலையில் இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படுவது முற்றிலும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடும். ஆகையால் இத்திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று கூறினர். பின்னர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து நேற்று ஏரியில் இறங்கி நடைபெற்று கொண்டிருந்த பணியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வி, கயர்லபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அமைதி பேச்சுவார்த்தை

இதனையடுத்து நடைபெற்று கொண்டிருந்த பணி நிறுத்தப்பட்டு அதற்கான எந்திரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதில் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட போலீசார் கூடிய விரைவில் இந்த திட்டம் செயல்படுத்த வேண்டுமா?, வேண்டாமா? என்பது குறித்த விவசாயிகளுடன், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித் துறையினர் கூடிய அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

Next Story