பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்-மகன் மீது தாக்குதல்: போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்


பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்-மகன் மீது தாக்குதல்: போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Jun 2020 5:09 AM IST (Updated: 14 Jun 2020 5:09 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் அவருடைய மகன் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நார்த்தாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது59). போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர் ஆவார். தற்போது நீடாமங்கலம் அருகே உள்ள திருவள்ளுவர் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவருடைய மகன் இளம்பரிதி (35). இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர். நேற்று முன்தினம் ராஜேந்திரன் வழக்கம்போல் நார்த்தாங்குடியில் உள்ள வயலுக்கு சென்றுவிட்டு இரவு 10 மணி அளவில் மகன் இளம்பரிதி உடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

தாக்குதல்

நீடாமங்கலம் ரெயில்வே கேட் அருகே வந்தபோது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபுதாஸ், ஏட்டு முருகன் ஆகிய இருவரும் அவர்களை வழிமறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் சப்-இன்ஸ்பெக்டர் பாபுதாஸ், முருகன் ஆகியோர் ராஜேந்திரன், இளம்பரிதி ஆகிய 2 பேரையும் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாலை மறியல்

இதுதொடர்பாக நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் இளம்பரிதி, போலீஸ்காரர்கள் தன்னை தாக்கியதாக புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் அவருடைய மகனை தாக்கிய போலீசாரை கண்டித்தும், அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் நார்த்தாங்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் கிராம மக்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த வலங்கைமான் தாசில்தார் கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் ஆகியோர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வழக்குப்பதிவு

இதனிடையே ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக ராஜேந்திரன், அவருடைய மகன் இளம்பரிதி ஆகிய 2 பேர் மீதும் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story