ஸ்ரீபெரும்புதூர் சோதனைச்சாவடியில் இ.பாஸ் இல்லாததால் இருதய நோயாளியை தடுத்து நிறுத்திய போலீசார்


ஸ்ரீபெரும்புதூர் சோதனைச்சாவடியில் இ.பாஸ் இல்லாததால் இருதய நோயாளியை தடுத்து நிறுத்திய போலீசார்
x
தினத்தந்தி 14 Jun 2020 1:13 AM GMT (Updated: 14 Jun 2020 1:13 AM GMT)

ஸ்ரீபெரும்புதூர் சோதனைச்சாவடியில் இ.பாஸ் இல்லாததால் இருதய நோயாளியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஸ்ரீபெரும்புதூர்,

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த அன்னப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68).

இவருக்கு நேற்று மதியம் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரது மகன் ராமச்சந்திரன் தந்தை ராஜேந்திரனை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அழைத்து சென்றார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ராஜேந்திரனை கொரோனா அச்சுறுத்தலால் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

பின்னர் அவர் தனது தந்தையை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செடிப்பேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிப்பதற்காக ஆட்டோவில் அனுப்பி வைத்தார். ராமச்சந்திரன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செட்டிபேடு என்ற இடத்தில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ராஜேந்திரன் சென்ற ஆட்டோ மற்றும் ராமச்சந்திரன் சென்ற மோட்டார் சைக்கிளை போலீசார் மடக்கி இ.பாஸ் கேட்டனர்.

அதற்கு ராமச்சந்திரன் தனது தந்தை இருதய நோயால் உயிருக்கு போராடுகிறார். அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கெஞ்சி உள்ளார். இ.பாஸ் இல்லாததால் போலீசார் அனுமதி மறுத்ததுடன், ராமச்சந்திரனின் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிவரை ராமச்சந்திரன் போலீசாரிடம் கெஞ்சியதாக தெரிகிறது. பின்னர் 4 மணிக்கு மேல் ராஜேந்திரன் இருந்த ஆட்டோவை மட்டும் போலீசார் அனுமதித்தனர். அவசரம், அவரசமாக ராஜேந்திரனை செடிப்பேடு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றபோது அங்கு டாக்டர்கள் இல்லை என கூறி திருப்பி அனுப்பி விட்டனர். பின்னர் ராஜேந்திரனை பூந்தமல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அழைத்து சென்றனர். பின்னர் தாம்பரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “ராஜேந்திரன் வந்த ஆட்டோ தவறான பாதையில் வாகனங்கள் செல்லும் எதிர் திசையில் வந்ததாகவும், அதற்கு விளக்கம் கேட்டதாவும் தெரிவித்தனர்.

Next Story