துபாயில் சிக்கி தவிக்கும் கூடலூரை சேர்ந்த 28 பேரை அழைத்து வர மத்திய மந்திரிக்கு கடிதம் - ஆ.ராசா எம்.பி. தகவல்


துபாயில் சிக்கி தவிக்கும் கூடலூரை சேர்ந்த 28 பேரை அழைத்து வர மத்திய மந்திரிக்கு கடிதம் - ஆ.ராசா எம்.பி. தகவல்
x
தினத்தந்தி 14 Jun 2020 4:15 AM IST (Updated: 14 Jun 2020 9:22 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் சிக்கி தவிக்கும் கூடலூரை சேர்ந்த 28 பேரை அழைத்து வர மத்திய மந்திரிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக ஆ.ராசா எம்.பி. தெரிவித்தார். முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா, நேற்று ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஊட்டி,

கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி திடீரென ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் உடனடியாக என்னால் டெல்லியில் இருந்து ஊட்டிக்கு திரும்பி வர முடியவில்லை. எனினும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க கட்சியினரை அறிவுறுத்தினேன். அதன்படி 80 டன் அரிசி வழங்கப்பட்டு உள்ளது. ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் 46 ஆயிரம் பேருக்கு 200 டன் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. 2-ம் கட்டமாக 100 டன் அரிசி வழங்கப்பட உள்ளது.

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருகிறவர்களுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் மாவட்ட எல்லைகளில் வெளியிடங்களில் இருந்து வருகிறவர்களுக்கு முறையாக சோதனை மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான விதிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் வகுக்கவில்லை. அந்தந்த மாவட்ட எல்லைகளில் கொரோனா பரிசோதனையை முறைப்படுத்த வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் எனது முயற்சியால் மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி கிடைத்தது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி முடிந்தாலும், சம்பந்தப்பட்ட இடம் வனத்துறைக்கு சொந்தமானது என்பதால் மத்திய அரசின் அனுமதிக்காக காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருந்தாலும், மாநில அரசு தனது பங்களிப்பை அளித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஊரடங்கால் வெளிநாடுகளில் வேலை இழந்து சிக்கி தவித்த 56 பேரை விமானம் மூலம் அழைத்து வர வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பி இருந்தேன். அவர் அதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுத்து, அவர்கள் தமிழகம் வர ஏற்பாடு செய்தார். அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது கூடலூரை சேர்ந்த 28 பேர் துபாயில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தமிழர்கள் வெளிநாடுகளில் சிக்கி இருந்தால், எனது மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம். நான் மத்திய மந்திரிக்கு கடிதம் அனுப்பி நடவடிக்கை மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தி.மு.க. மாவட்ட செயலாளர் முபாரக், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story