ராமநாதபுரம் மாவட்டத்தில், 84 நாளுக்கு பிறகு 1,500 விசைப்படகுகள் மீன்பிடிக்க புறப்பட்டன - மீன் விலை குறைய வாய்ப்பு
84 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் உள்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 1,500 விசைப்படகுகளில் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதனால் மீன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேசுவரம்,
கொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதே நேரம் 61 நாள் தடை காலமும் தொடங்கியதால் கடந்த 84 நாட்களாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாகவும், தடைக்காலம் முடிந்ததாலும் 84 நாட்களுக்கு பிறகு ராமேசுவரத்தில் இருந்து நேற்று பகல் 12.30 மணி அளவில் மீன்துறை அலுவலகத்தில் முறையாக மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று 700 விசைப்படகுகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் வடக்கு கடலான பாக்ஜலசந்தி கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இதே போல் மண்டபம், தொண்டி, சோழியக்குடி உள்பட மாவட்டம் முழுவதும் 1,500 விசைப்படகுகளில் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கரை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
84 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்றுள்ளதால் இறால் உள்ளிட்ட அனைத்து வகை மீன்களுமே அதிகஅளவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல தொடங்கி உள்ளதால் அனைத்து வகை மீன்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
தடைக்காலம் முடிந்து ராமேசுவரம், மண்டபம், தொண்டி, சோழியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்களும் ஒரே நாளில் இந்த முறை மீன் பிடிக்க சென்றுள்ளனர்.ஆனால் பாம்பனில் உள்ள சுமார் 20 விசைப்படகுகள் மட்டும் மீன்துறை அலுவலகத்தில் அனுமதிசீட்டு பெறாமலேயே மீன் பிடிக்க சென்றுள்ளதாகவும், இந்த படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள், மீன்துறை உதவி இயக்குனரிடம் மனு கொடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story