முதல்-அமைச்சரிடம் பேசி ‘ஆன்-லைன்’ மதுவிற்பனை குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் தங்கமணி பேட்டி


முதல்-அமைச்சரிடம் பேசி ‘ஆன்-லைன்’ மதுவிற்பனை குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 14 Jun 2020 1:37 PM IST (Updated: 14 Jun 2020 1:37 PM IST)
t-max-icont-min-icon

‘ஆன்-லைன்’ மது விற்பனை குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

பள்ளிபாளையம், 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த கலியனூரில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஏரிகள் நீர்வரத்து பெறுகின்ற வகையில் முதல்- அமைச்சர் ஏற்கனவே நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் காவிரி ஆறு, பொன்னி ஆறு, திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அறிவித்திருந்தார். முதல்கட்டமாக சேலம் மாவட்டத்தில் மேட்டூர் உபரிநீரை சேகரித்து 100 ஏரிகளில் நிரப்பப்படும் என்றும், நாமக்கல் மாவட்டத்தில் அடுத்தகட்டமாக செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்து இருந்தார்.

அதன்படி நாமக்கல் மாவட்டத்திற்கு ஏரிகள் நீர்வசதி பெறுகின்ற வகையில் காவிரி ஆறு, பொன்னியாறு, திருமணிமுத்தாறு ஆகியவற்றை இணைத்து, ஏரிகளுக்கு நீர் கொண்டுவரும் திட்ட ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

டாஸ்மாக் மதுபானங்களை ‘ஆன்-லைன்’ வழியே விற்க பரிசீலிக்கப்படுமா? என்று சுப்ரீம் கோர்ட்டு கேட்டுள்ளது. இந்த விஷயத்தில் பல்வேறு கொள்கை முடிவுகள் உள்ளதால், இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் பேசி விரைவில் முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

கொல்லிமலையில் விவசாய நிலத்தில் வெட்டுக்கிளிகள் தாக்கம் உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, கொல்லிமலையில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் வெட்டுக்கிளி காணப்பட்டுள்ளது. அது பாலைவன வெட்டுக்கிளி அல்ல என்பதும், அது உள்ளூர் வெட்டுக்கிளி என்பதும் தெரியவந்ததையடுத்து, பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொல்லிமலையின் பல்வேறு இடங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலைவன வெட்டுக்கிளி இல்லை என்ற போதிலும் அதுகுறித்து முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.

Next Story