கீழ்வேளூர் அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வாய்க்கால் நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


கீழ்வேளூர் அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வாய்க்கால் நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 15 Jun 2020 2:30 AM IST (Updated: 14 Jun 2020 10:10 PM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

சிக்கல்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே பட்டமங்கலத்தில் மிரட்டு வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் பட்டமங்கலம், சொட்டால் வண்ணம், வடக்காலத்தூர் ஆகிய 3 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த வாய்க்கால் குருக்கத்தி, கூத்தூர், சீனிவாசபுரம், சாத்தங்குடி ஆகிய பகுதிகளுக்கு வடிகாலாகவும் பயன்படுகிறது. இந்த வாய்க்காலின் முகப்பில் ஷட்டர் மற்றும் தடுப்புச்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. இதை சரிவர பராமரிக்காததால் கீழ்குமிழிமூலம் வெளியேறும் தண்ணீர் ஆவராணி வாய்க்காலில் கலந்து விடுவதால் மிரட்டும் வாய்க்காலில் போதுமான தண்ணீர் வருவதில்லை.

புதர் மண்டி கிடக்கிறது

இந்த வாய்க்கால் 10 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால் செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதால் விளைநிலங்களுக்கு தண்ணீர் முழுமையாக செல்வதில்லை.

இதுகுறித்து பட்டமங்கலத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

இந்த வாய்க்கால் தண்ணீரை வாரி கொண்டுவருவதால் இதனை மிரட்டு வாய்க்கால் என்று அழைத்து வருகிறோம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வாய்க்கால் முறையாக தூர்வாராமல் விட்டுவிட்டனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆக்கிரமிப்பு

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளிடம் பணம் வசூலித்து நாங்களே வாய்க்காலை தூர்வாரினோம். அதில் முகப்பு பகுதியை மட்டுமே ஓரளவு சரிசெய்ய முடிந்தது. முழுமையாக தூர்வார முடியவில்லை. இந்த ஆண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து தூர்வார வலியுறுத்தினோம். அதற்கு அவர்கள் தூர்வாருவதற்கு நிதியில்லை என்று தெரிவித்து விட்டனர்.

ஷட்டர், கீழ்குமிழி, மற்றும் கரைகளை சரி செய்து வாய்க்காலை தூர்வாரினால் மட்டுமே 3 கிராமங்களில் விவசாயம் செய்யமுடியும். வாய்க்கால்களிலும் சில இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 மீட்டரில் அகலத்தில் தொடங்கும் வாய்க்கால் பட்டமங்கலம் பகுதியில் சுருங்கி தற்போது 1½ மீட்டர் அகலத்தில் மட்டுமே உள்ளது. இன்னும் 10 நாட்களில் மேட்டூர் தண்ணீர் இந்த பகுதிக்கு வந்து விடும். அதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிரட்டு வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story