நெல்லை கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலம் விரைவில் திறக்கப்படும் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்


நெல்லை கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலம் விரைவில் திறக்கப்படும் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 15 Jun 2020 4:45 AM IST (Updated: 15 Jun 2020 12:26 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நெல்லை, 

நெல்லை மாநகர பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆங்காங்கே பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டு ஒவ்வொன்றாக கட்டப்பட்டு வருகிறது.

இதையொட்டி தாமிரபரணி ஆற்றின் குறுக்கே நெல்லை டவுனையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் வகையில் கொக்கிரகுளத்தில் உள்ள சுலோச்சன முதலியார் பாலத்தின் அருகே புதிதாக ஒரு பாலம் கட்டுவதற்கு அரசு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்த புதிய பாலம் கட்டுமான பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. 10 தூண்கள், நடைபாதை வசதியுடன்கூடிய இந்த பாலம் 14.8 மீட்டர் அகலம், 235 மீட்டர் நீளத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் ரோடு மேம்படுத்தப்பட்டு பாலத்துடன் இணைக்கப்பட்டது.

சோதனை ஓட்டம்

இந்த பணியும் முடிவடைந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பாலத்தின் மீது வாகன போக்குவரத்து சோதனை நடத்தப்பட்டது. முதலில் இருசக்கர வாகனங்களும், அடுத்ததாக ஆட்டோ, கார்களும், இறுதியாக பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் செல்வதற்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இதனால் பழைய பாலமான சுலோச்சன முதலியார் பாலத்தில் வாகன நெருக்கடிகள் குறையும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இந்த பாலம் கட்டி முடிந்து ஒரு வருடத்தை நெருங்கும் வேளையிலும் பாலத்தை திறப்பது குறித்து அரசு முடிவு செய்வதாக தெரியவில்லை.

காட்சிபொருளாக மாறியிருக்கும் கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலம் திறப்பு எப்போது என்பது அனைவருடைய கேள்விகுறியாக உள்ளது.

விரைவில் திறக்கப்படும்

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலம் பணிகள் முடிவடைந்துள்ளது. இணைப்பு சாலை பணிகளும் முடிவடைந்துவிட்டது. அந்த ரோடு உறுதித்தன்மை அடைவதற்காக தற்காலிகமாக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனுடன் இணைந்த பலாப்பழ ஓடையின் மீது புதிய பாலம் பணி முடிவடைந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பாலம் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் விரைவில் அரசின் அனுமதி பெற்று முறைப்படி பாலத்தை திறந்து வைத்து போக்குவரத்து தொடங்கி வைக்கப்படும் என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story