நெல்லை மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கால அவகாசம் - கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் நடப்பு கார் பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்ய நெல், உளுந்து, பருத்தி, நிலக்கடலை, வாழை, வெண்டை ஆகிய பயிர்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தினை செயல்படுத்த தேசிய தகவலியல் மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட காணொலி காட்சி மூலம் கலெக்டர் ஷில்பா தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழுகூட்டம் நடந்தது.
அப்போது கலெக்டர் ஷில்பா பேசியதாவது:-
பயிர் காப்பீடு செய்ய நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.592-ம், இதர பயிர்களான உளுந்து பயிருக்கு ரூ.331-ம், பருத்திக்கு ரூ.601-ம், நிலக்கடலைக்கு ரூ.410-ம், வாழைக்கு ரூ.3 ஆயிரத்து 250-ம், வெண்டைக்கு ரூ.286-ம் காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும்.
நெல், உளுந்து, வெண்டை பயிர்களை காப்பீடு செய்ய அடுத்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி கடைசி நாளாகவும், நிலக்கடலை, பருத்தி பயிர்களை காப்பீடு செய்ய ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி கடைசி நாளாகவும், வாழை பயிர் காப்பீடு செய்ய ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி கடைசி நாளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விதைப்புச்சான்று
நடப்பு ஆண்டில் இந்த திட்டம் நெல்லை மாவட்டத்தில் ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் விருப்பத்தின் அடிப்படையில் இந்த திட்டத்தில் சேரலாம்.
இந்த திட்டத்தில் சேர முன்மொழிவு படிவம், பதிவு படிவம், அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்குப்புத்தக முன்பக்க நகல் ஆகியவற்றை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும். விதைப்புக்கு முன்பே இதில் சேரவும், தடுக்கப்பட்ட விதைப்புக்கும் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் விதைப்புச்சான்று தேவையான ஒன்றாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story