நெல்லை, தென்காசியில் சிறை வார்டன் உள்பட 37 பேருக்கு கொரோனா


நெல்லை, தென்காசியில் சிறை வார்டன் உள்பட 37 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 Jun 2020 4:30 AM IST (Updated: 15 Jun 2020 12:57 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசியில் சிறை வார்டன் உள்பட 37 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

நெல்லை, 


நெல்லையில் கொரோனா படிப்படியாக வேகம் எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதுரை மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றும் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நெல்லையை சேர்ந்த அவர் சமீபத்தில் ஊருக்கு வந்திருந்தார். அப்போது இவருக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் தாமாக சென்று பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

21 பேருக்கு தொற்று

இதேபோல் நெல்லை டவுன், ரெட்டியார்பட்டி, பாளையங்கோட்டை சாந்திநகர் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என மொத்தம் 21 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 19 பேருக்கு உள்ளூர் பரவலாக அமைந்துள்ளது.

மீதி 2 பேர் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 464 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று 7 பேருடன் சேர்த்து மொத்தம் 374 பேர் பூரண குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகினர். 89 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் ஏற்கனவே இறந்து விட்டார்.

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டத்திலும் நேற்று அதிகப்படியானோருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. 118 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது. இதில் 90 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டனர். மீதி 44 பேர் தென்காசி மற்றும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 427 ஆக உள்ளது. நேற்று மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிவத்தையாபுரத்தை சேர்ந்த ஒரு கர்ப்பிணி, சென்னையில் இருந்து வந்த ஒரு போலீஸ்காரரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story