தூத்துக்குடி, கோவில்பட்டியில் இருந்து ஒடிசா மாநில தொழிலாளர்கள் 75 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
தூத்துக்குடி, கோவில்பட்டியில் இருந்து ஒடிசா மாநில தொழிலாளர்கள் 75 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 ஆயிரத்து 700 பேர் வேலை பார்த்து வந்தனர். இதில் சுமார் 5 ஆயிரத்து 500 பேர் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்து, அதற்கான பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களை சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே பீகார், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி
இந்த நிலையில் விருதுநகரில் இருந்து ஒடிசாவுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒடிசா தொழிலாளர்களை அனுப்பி வைக்க, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி தூத்துக்குடியைச் சேர்ந்த 23 பேர், ஓட்டப்பிடாரத்தில் பணியாற்றிய 4 பேர், சாத்தான்குளத்தில் பணியாற்றிய 4 பேர், மாலத்தீவில் இருந்து கப்பலில் வந்த 3 பேர் ஆக மொத்தம் 34 பேர் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார் தலைமையில் உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அவர்கள் சிறப்பு பஸ்சில் விருதுநகர் ரெயில் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கோவில்பட்டி
இதேபோன்று மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 22 பேர், கோவில்பட்டியில் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம் பகுதியில் வசித்த ஒடிசா மாநில தொழிலாளர்கள் 19 பேர் சொந்த ஊருக்கு செல்ல பதிவு செய்து இருந்தனர்.
இதையடுத்து அவர்கள் 41 பேருக்கும் நேற்று கோவில்பட்டி தனியார் கல்லூரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர்களை சிறப்பு பஸ்சில் விருதுநகருக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து ஒடிசா மாநிலத்துக்கு செல்லும் ரெயிலில் அவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
Related Tags :
Next Story