தோனி சுயசரிதையில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சு‌ஷாந்த் சிங் தற்கொலை - பிரதமர் மோடி இரங்கல்


தோனி சுயசரிதையில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சு‌ஷாந்த் சிங் தற்கொலை - பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 14 Jun 2020 11:28 PM GMT (Updated: 14 Jun 2020 11:28 PM GMT)

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமான இளம் இந்தி நடிகர் சு‌ஷாந்த் சிங் ராஜ்புத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மும்பை, 

மும்பை பாந்திராவில் வசித்து வந்தவர் 34 வயது இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவர் நேற்று காலையில் அவரது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்குவதை அவரது உதவியாளர்கள் பார்த்து உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் தூக்கில் பிணமாக தொங்கிய நடிகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நடிகர் சு‌ஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை கூடுதல் போலீஸ் கமி‌‌ஷனர் மனோஜ் சர்மா உறுதிப்படுத்தினார். மேலும் தற்கொலை கடிதம் எதுவும் அவரது வீட்டில் இருந்து சிக்கவில்லை எனவும், இது குறித்து விசாரணை நடப்பதாகவும் அவர் கூறினார். இளம் நடிகரான சு‌ஷாந்துக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது தற்கொலைக்கு காதல் பிரச்சினை எதுவும் காரணமாக இருக்குமா? அல்லது வேறு பிரச்சினை காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் பெண் மேலாளர் தற்கொலை

சு‌ஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மானேஜர் தி‌ஷா சாலின்.

நடிகர் சு‌ஷாந்த் சிங் ராஜ்புத் 1986-ம் ஆண்டு பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர். தனது 22-வது வயதில் டி.வி. தொடர்களில் நடிக்க தொடங்கினார். 2009-ம் ஆண்டு ‘பவித்ர ரிஸ்தா’ டி.வி. தொடரில் மானவ் தே‌‌ஷ்முக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். ‘ஹை போ சே’ என்ற படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகம் ஆனார்.

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு (எம்.எஸ்.தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி) படத்தில் நடித்ததன் மூலம் நாடு முழுவதும் அறியப்படும் நடிகர் ஆனார். இந்த படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. கடைசியாக இவர் நடித்து வெளியான ‘சிச்சோர்’ என்ற படம் மெகாஹிட் ஆகி இருந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நடிகர் சு‌ஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் பெண் மேலாளர் தி‌ஷா சாலின் என்பவர் மும்பை மலாடில் உள்ள கட்டிடத்தின் 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த ஏப்ரல் 29-ந் தேதி நடிகர் இர்பான் கான் அரியவகை புற்றுநோயால் உயிரிழந்தார். பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் அதற்கு அடுத்த நாளே மறைந்தார். இந்தநிலையில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இருப்பதால் இந்தி திரையுலகம் அதிர்ச்சி அடைந்து உள்ளது.

பிரதமர் இரங்கல்

நடிகர் சு‌ஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘சிறந்த இளம் நடிகரான சு‌ஷாந்த் சிங் ராஜ்புத் நம்மிடம் இருந்து குறுகிய காலத்தில் பிரிந்து சென்று விட்டார். அவர் டி.வி. மற்றும் திரைப்படங்களில் திறமையாக நடித்து வந்தார். பொழுதுபோக்கு துறையில் அவரின் வளர்ச்சி பலருக்கு உத்வேகமாக இருந்தது. அவரின் மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது. அவரின் குடும்பத்தினர், ரசிகர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘பல இளைஞர்களுக்கு உத்வேகமாக இருந்த சு‌ஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. வெள்ளித்திரையில் பல கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதேபோல மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா, ரெயில்வே மந்திரி பியூ‌‌ஷ் கோயல், மாநில முதல்-மந்திரிகள் உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன், விளையாட்டு வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, முகமது சமி, அஸ்வின், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Next Story