போலி முத்திரை ஒட்டி மோசடி: மதுபான ஆலை பொது மேலாளர் கைது - சி.பி.சி.ஐ.டி. போலீசார் துருவி துருவி விசாரணை


போலி முத்திரை ஒட்டி மோசடி: மதுபான ஆலை பொது மேலாளர் கைது - சி.பி.சி.ஐ.டி. போலீசார் துருவி துருவி விசாரணை
x
தினத்தந்தி 15 Jun 2020 5:54 AM IST (Updated: 15 Jun 2020 5:54 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் மதுபாட்டில்களில் போலி முத்திரை ஒட்டி மோசடி செய்தது தொடர்பாக மதுபான ஆலை பொது மேலாளரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து துருவிதுருவி விசாரித்து வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுச்சேரி வில்லியனூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மதுபான தொழிற்சாலையில் ஹாலோகிராம் என்ற முத்திரையை போலியாக தயாரித்து மதுபாட்டில்களில் ஒட்டி மோசடி செய்வதாக புகார் வந்தது. இதனைத்தொடர்ந்து கலால் துறை அதிகாரிகள் அங்கு சென்று சோதனை செய்தனர். இதில் மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே கலால் துறை அதிகாரிகள் அந்த மதுபான ஆலைக்கு சீல் வைத்தனர். இந்தநிலையில் ஆலையின் உரிமையாளர் குமார் தலைமறைவானார்.

இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

அதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர வல்லாட், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில், போலி ஹாலோகிராம் ஸ்டிக்கர்களை மதுபாட்டில்களில் ஒட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஆலையின் பொதுமேலாளரான ஐதராபாத்தை சேர்ந்த பொன்னா ராவ் (வயது55) என்பவரை பிடித்தனர். அவரை போலீசார் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக சேர்த்தனர். இந்த பரிசோதனையின் முடிவு நேற்று மதியம் வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து பொன்னாராவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து அழைத்துச் சென்று துருவிதுருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனக்கும் இந்த மோசடிக்கும் எந்த தொடர்பும் இல்லை. தனியார் மது ஆலையின் உரிமையாளர் குமார் தான் போலியான ஹாலோகிராம் ஸ்டிக்கர்களை கொண்டுவருவார். நேரடியாக அவரே இதை கையாண்டு வந்தார். எனவே அதுபற்றி எதுவும் எனக்கு தெரியாது என்று போலீசாரிடம் கூறி இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள மதுபான ஆலை உரிமையாளர் குமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகிறார்கள். அவர் தற்போது சென்னையில் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. அவரை தேடி போலீசார் சென்னை விரைந்துள்ளனர். குமாரை கைது செய்து விசாரணை நடத்தினால் தான் போலி ஹாலோகிராம் ஸ்டிக்கர் மூலம் எத்தனை கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஹாலோகிராம் ஸ்டிக்கர் யார் மூலமாக கிடைத்தது என்பது போன்ற பல்வேறு தகவல்கள் தெரியவரும்.

Next Story