கல்லணை கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


கல்லணை கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x

கல்லணை கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருக்காட்டுப்பள்ளி,

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கட்டப்பட்ட அணை கல்லணை. இந்த அணையில் உள்ள மதகு பாலம் வழியாக கனரக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

போக்குவரத்து வசதிக்காக கல்லணையில் புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன்படி கல்லணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே திருச்சி-தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

கட்டுமான பணிகள்

பாலம் கட்டுமான பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. தஞ்சை மாவட்டம் கோவிலடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து, திருச்சி மாவட்டம் கிளிக்கூடு பகுதி வரை 1,100 மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் வேகமெடுத்தன.

பாலம் கட்டுவதற்காக 42 மீட்டர் இடைவெளியில் 25 தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதன்மேல் உத்திரங்கள் ராட்சச எந்திரங்கள் மூலம் தூக்கி வைக்கப்பட்டது. பாலத்தின் கைப்பிடி சுவர்கள், சாலை பணிகள் யாவும் முடிவடைந்துள்ளன. பாலத்தின் கிழக்கு பகுதியில் பிரதான சாலையில் சேருமிடத்தில் சாய்தள சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

நில எடுப்பு பணிகள்

அதே நேரத்தில் பாலத்தின் மேற்கு பகுதியில் அதாவது திருச்சி மாவட்டத்தில் பிரதான சாலையோடு சேருமிடத்தில் சாய் தள சாலை அமைக்கும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. திருச்சி மாவட்ட பகுதியில் பாலத்துக்கான நில எடுப்பு பணிகள் முடிவடைந்து நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் திருச்சி மாவட்டம் கிளிக்கூடு பகுதியில் பணிகள் முடியவில்லை. கல்லணை கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணிகளை விரைவாக முடித்து திருவையாறு மற்றும் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து திருச்சிக்கு நேரடியாக பஸ் விடும் நாளை இந்த பகுதி பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதற்குரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Next Story