தூய்மை பணியாளரின் மனைவி சாவு: சேலத்தில் கொரோனாவுக்கு முதல் பலி
சேலத்தில் கொரோனாவுக்கு முதல் பலியாக தூய்மை பணியாளரின் மனைவி இறந்தார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 150-க்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் 1,500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்மாபேட்டை மண்டலம் 9-வது வார்டில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர் ஒருவரின் மனைவிக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து உடனடியாக அவர் சேலம் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரது கணவர் மற்றும் மகன், மகளுக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்களும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, தூய்மை பணியாளரின் 45 வயதான மனைவியின் உடல் நிலை மேலும் மோசமானது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். இதனால் சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர் வசித்து வந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த வார்டில் பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்றும், தூய்மை பணியாளரின் குடும்பத்தினருடன் யார், யார் தொடர்பில் இருந்தார்கள்? என்ற விவர பட்டியல் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனாவுக்கு பலியான மாநகராட்சி தூய்மை பணியாளரின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு பஸ் மாறி, மாறி சென்று வந்ததாகவும், அதிலிருந்து அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று திடீரென உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு பெண் பலியான சம்பவம் சேலத்தில் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story