திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வருகையை தடுக்க வேலி அமைப்பு - அதிகாரிகள் நடவடிக்கை
கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வருகையை தடுக்க, கோவில் முன்பு அதிகாரிகள் வேலி அமைத்துள்ளனர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற தலமாகும். இக்கோவிலுக்கு கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.
இங்கு முகூர்த்த நாட்களில் 50 திருமணம் முதல் 300 திருமணம் வரை நடைபெற்று வந்தது. மேலும் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மொட்டையடித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி செல்வார்கள்.
இதற்கிடையே கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் 5-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. ஆனால் வழிபாட்டு தலங்களை திறக்க எவ்வித அனுமதியும் வழங்கவில்லை.
இந்த நிலையில் ஊரடங்கால் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலிலுக்கு பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என கோவில் நிர்வாகம் சார்பில் பலமுறை அறிவுறுத்தி வந்தனர். ஆனால் பொதுமக்கள் கோவிலுக்கு நேரில் வந்து மொட்டை அடித்து, கோவில் முன்புறம் மற்றும் பின்புற வாசலில் தேங்காய் உடைத்து பூ மற்றும் துளசி வைத்து வழிபட்டு செல்கின்றனர்.
இதனால் நாளுக்கு நாள் பொதுமக்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதுபற்றி அறிந்த கோவில் நிர்வாகத்தினர் பக்தர்களின் வருகையை தடுப்பதற்காக கோவிலின் முன்புறமும், கோவிலை சுற்றிவரும் பாதையிலும் தடுப்பு வேலி அமைத்தனர். மேலும் பொதுமக்கள் காரணமின்றி கோவிலுக்கு வரக்கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story