கோத்தகிரி அருகே, அனுமதியின்றி மரங்களை வெட்டிய 2 பேர் மீது வழக்கு - வனத்துறையினர் நடவடிக்கை


கோத்தகிரி அருகே, அனுமதியின்றி மரங்களை வெட்டிய 2 பேர் மீது வழக்கு - வனத்துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Jun 2020 11:45 AM IST (Updated: 15 Jun 2020 11:45 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே அனுமதியின்றி மரங்களை வெட்டிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி வனச்சரகத்துக்கு உட்பட்ட கீழ்கோத்தகிரி அருகே உள்ள செம்மனாரை, கரிக்கையூர், சோலூர்மட்டம், பங்களா பாடிகை ஆகிய பழங்குடியின கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான விலை உயர்ந்த மரங்கள் காணப்படுகின்றன. மேலும் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலங்களிலும் மரங்கள் உள்ளன. இந்த மரங்களை நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி வெட்டக்கூடாது. இந்த நிலையில் சோலூர்மட்டம் கிராமத்தில் கடக்கோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் வளர்ந்து இருந்த கிழிஞ்சி நாவல், பலா, விக்கி மரங்கள் வெட்டப்பட்டு உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அங்கு கோத்தகிரி வனச்சரகர் செல்வகுமார், வனவர் சக்திவேல் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது உரிய அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் தேயிலை தோட்டத்தில் நிழல் விழுவதால், மரங்களை வெட்டியதாக உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் உரிய அனுமதி பெறாமல் மரங்களை வெட்டியதாக உரிமையாளர்கள் நஞ்சுண்டன், அருண்குமார் ஆகிய 2 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

மலைப்பிரதேசமான நீலகிரியில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலமாக இருந்தாலும், அதில் உள்ள மரங்களை வெட்ட வேண்டுமானால், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். இதை மீறி கடக்கோடு பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு முடியும் வரை, வெட்டப்பட்ட மரத்துண்டுகளை உரிமையாளர்கள் தங்களது பொறுப்பிலேயே பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story