செஞ்சி பகுதியில், வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது - பணம், செல்போன்கள் பறிமுதல்


செஞ்சி பகுதியில், வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது - பணம், செல்போன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Jun 2020 6:15 AM GMT (Updated: 15 Jun 2020 6:15 AM GMT)

செஞ்சி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

செஞ்சி, 

செஞ்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர சுப்பிரமணியன், அசாருதீன், முகமதுஅலி ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று அப்பம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், போலீசாரை பார்த்ததும் திரும்பி செல்ல முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரவி மகன் விஜய்(வயது 22) என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு செஞ்சி சிறுகடம்பூரை சேர்ந்த உஷா என்பவரை வழிமறித்து 18 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போனை பறித்துச் சென்றிருப்பது தெரிந்தது.

இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், செஞ்சி பகுதியில் தனியாக செல்பவர்களை வழிமறித்து பணம், செல்போன்கள் பறித்துச் செல்வதோடு, பொது இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களையும் திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து விஜயை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 8 செல்போன்கள், 10 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டது.

Next Story