புதுக்கோட்டையில் 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் சரக்கு வேன் டிரைவர் கைது


புதுக்கோட்டையில் 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் சரக்கு வேன் டிரைவர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2020 12:12 AM GMT (Updated: 16 Jun 2020 12:12 AM GMT)

புதுக்கோட்டையில் 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். சரக்கு வேன் டிரைவரை கைது செய்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை போஸ் நகரில் நேற்று காலை கணேஷ்நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குடி நோக்கி சென்ற சரக்கு வேன் ஒன்றை போலீசார் மடக்கி சோதனையிட்டனர். அதில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக இருந்தது. இது குறித்து டிரைவரிடம், போலீசார் விசாரணை நடத்தியபோது, ஆலங்குடியை சேர்ந்த தமிழரசன் என்பவருக்காக கொண்டு செல்வதாகவும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து விலை கொடுத்து வாங்கி சேகரித்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கணேஷ்நகர் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசியை விலை கொடுத்து வாங்கி ஏழைகளுக்கு கொரோனா நிவாரணமாக வழங்க இருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் சரக்கு வேன் டிரைவர் ஆலங்குடி படேல்நகரை சேர்ந்த பத்மநாதன் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு வேனில் இருந்த 1½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்ட ரேஷன் அரிசியை முறைகேடாக விலைக்கு வாங்கியது தொடர்பாக தமிழரசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story