தோகைமலைக்கு வேலைக்கு வந்தமராட்டிய மாநில தொழிலாளர்கள் 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்


தோகைமலைக்கு வேலைக்கு வந்தமராட்டிய மாநில தொழிலாளர்கள் 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
x
தினத்தந்தி 16 Jun 2020 5:51 AM IST (Updated: 16 Jun 2020 5:51 AM IST)
t-max-icont-min-icon

தோகைமலைக்கு வேலைக்கு வந்த மராட்டிய மாநில தொழிலாளர்கள் 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே கழுகூர் பகுதியில் இரும்பு குழாய் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பல்வேறு வடமாநில பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று காலை மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மொத்தம் 19 பேர் கழுகூரில் உள்ள இந்த குழாய் தயாரிப்பு நிறுவனத்திற்கு வேலைக்கு வந்துள்ளனர்.

19 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமார் அளித்த தகவலின் பேரில், குளித்தலை வட்டாட்சியர் ரெத்தினவேலு, வருவாய் அலுவலர் நீதிராஜன், சுகாதார ஆய்வாளர் பொன்னுசாமி உள்ளிட்ட அதிகாரிகள் தனியார் நிறுவனத்திற்கு சென்று விசாரித்தனர். அதில் மராட்டிய மாநிலத்தில் இருந்து 19 பேர் வந்தது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து இந்த நிறுவனத்தில் தொழிலாளர்கள் தங்குவதற்காக ஒரு அறையில் அந்த 19 பேரையும் 14 நாட்களுக்கு தனிமை படுத்திக்கொள்ளவும், வெளியில் செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகள் வழங்கினர்.

பொதுமக்கள் அச்சம்

மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்தையும், அந்த தனியார் நிறுவனம் செய்துதந்து அவர்களை பாதுகாப்புடன் கவனித்துக் கொள்ளவேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தோகைமலை அருகேயுள்ள கழுகூருக்கு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வந்திருப்பது இப்பகுதியில் பொதுமக்களிடையே பரபரப்பையும், வைரஸ் தொற்று பரவும் என்கின்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story