மயிலாடுதுறையில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தொற்று நோய் பரவும் அபாயம்


மயிலாடுதுறையில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தொற்று நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 16 Jun 2020 12:57 AM GMT (Updated: 16 Jun 2020 12:57 AM GMT)

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

குத்தாலம்,

மயிலாடுதுறை நகரில் கடந்த 15 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி நகரில் சேகரிக்கப்படும் கழிவுநீர் பிரதான குழாய்கள் வழியாக மன்னம்பந்தலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. கழிவுநீர் தடையின்றி செல்வதற்காக 10 இடங்களில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு ஒருமுறை ‘பம்பிங்’ செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சில இடங்களில் உள்ள கழிவு நீரேற்று நிலையங்கள் சரிவர செயல்படாததால் ஆங்காங்கே பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலை மற்றும் தெருக்களில் தேங்கி நிற்பது வாடிக்கையாக நடக்கிறது.

பொதுமக்கள் அவதி

பாதாளசாக்கடை குழாய் உடைப்பு காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சாலை உள்வாங்கி பள்ளம் உருவாகி உள்ளது. இதை அரசு சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பின்னரும் பாதாள சாக்கடை குழாய்கள் சீரமைக்கப்படவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

மயிலாடுதுறை கவரத்தெருவில் பாதாளசாக்கடை ஆள்நுழைவு தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சீரமைக்க நடவடிக்கை

இதேபோல் நகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பாதாளசாக்கடை குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story