சுகாதார பணியாளர்களுக்கு தொற்று எதிரொலி: ஆரல்வாய்மொழியில் பாதுகாப்பு வசதிகளுடன் சோதனைச்சாவடி அதிகாரிகள் நடவடிக்கை


சுகாதார பணியாளர்களுக்கு தொற்று எதிரொலி: ஆரல்வாய்மொழியில் பாதுகாப்பு வசதிகளுடன் சோதனைச்சாவடி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Jun 2020 1:40 AM GMT (Updated: 16 Jun 2020 1:40 AM GMT)

சுகாதார பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு வசதிகளுடன் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது.

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை உள்பட சிவப்பு மண்டல பகுதியில் உள்ள வெளி மாவட்டங்கள், வெளிமாநிலத்தில் இருந்து குமரிக்கு வருபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வெளியூரில் இருந்து வருபவர்களை கண்காணிக்க குமரி மாவட்ட எல்லையில் உள்ள ஆரல்வாய்மொழி, களியக்காவிளை சோதனைச்சாவடியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சோதனைச்சாவடிகளை ஒட்டியபடி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சளி மாதிரி எடுக்கும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

பணியாளர்களுக்கு தொற்று

சோதனைச்சாவடியில் வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர், போலீசார், டாக்டர்கள் அடங்கிய குழுவினர் அங்கேயே முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்ட 3 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

குமரிக்கு வந்த நபர்களை பரிசோதனை செய்த போது, கொரோனா பாதித்த நபர் மூலமாக அவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். அதே சமயத்தில், போதிய பாதுகாப்பு வசதிகள் அவர்களுக்கு இல்லாதது தான் தொற்று ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு தொற்று ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்த நிலையில் சோதனைச்சாவடியை பாதுகாப்பு வசதியுடன் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

பாதுகாப்பு வசதியுடன்...

அதன்படி வெளியூரில் இருந்து குமரிக்கு வருபவர்கள் பற்றிய தகவலை சேகரிக்கும் வகையிலும், அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ஆரல்வாய்மொழியில் சோதனைச்சாவடி அமைக்கும் பணி நடந்து வருகிறது. கூண்டு வடிவிலான தகர கொட்டகை அமைத்து, கவுண்ட்டர் வசதியும் அமைக் கப்படுகிறது. இதனால் குமரிக்கு வருபவர்கள், சோதனையிடும் அதிகாரிகளுக்கு இடையே இடைவெளி இருக் கும். எனவே, கொரோனா தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story