வீட்டை அபகரித்த மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி


வீட்டை அபகரித்த மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி
x

வீட்டை அபகரித்த மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெட்ரோலை ஊற்றி தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக குறைதீர்க்கும் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு திங்கட்கிழமை தோறும் புகார் மனு அளிப்பதற்காக பொதுமக்கள் வந்தால், அவர்களிடம் இருந்து மனுக்களை பெறுவதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் புகார்பெட்டியும் வைக்கப்பட்டது.

இந்த பெட்டியில் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்கள் தங்கள் மனுக்களை போட்டு வருகின்றனர். அதன்படி நேற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் அந்த பெட்டியில் புகார் மனுக்களை போட்டுச்சென்றனர்.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு தம்பதி கையில் பையுடன் வந்தனர். அவர்களிடம் போலீசார் சோதனை நடத்த முயன்றனர். அதற்குள் அந்த தம்பதி, தாங்கள் கொண்டு வந்த பையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து, உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த தம்பதியை தடுத்து நிறுத்திய போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் சவேரியார் பாளையத்தை சேர்ந்த வேளாங்கண்ணி (வயது 60), அவருடைய மனைவி ஸ்டெல்லாமேரி (55) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வசித்த வீட்டின் பட்டாவை, அவர்களது மகனே அபகரித்துக்கொண்டதோடு வீட்டுக்குள் தாய்-தந்தையை நுழையவிடாமல் தடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த தம்பதி, கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

அதையடுத்து இருவரும் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் மனு ஒன்றை போட்டனர். அதில் வீட்டை அபகரித்த மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story