7 வயது சிறுவனின் கழுத்தில் குத்திய தொட்டில் கொக்கி அகற்றம் - கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை
கோவை அரசு ஆஸ்பத்திரியில் 7 வயது சிறுவனின் கழுத்தில் குத்திய தொட்டில் கொக்கியை அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
கோவை,
திருப்பூர் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவருடைய மகன் ரிதிகேஷ்வரன் (வயது 7). சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிறுவன் வீடு அருகே உள்ள ஒரு மரத்தில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்தான். நேற்று முன்தினம் சிறுவன் மரத்தில் ஏறி தொட்டில் கட்டும் போது எதிர்பாராதவிதமாக மரக்கிளை ஒடிந்து கீழே விழுந்தான். அப்போது கீழே கிடந்த தொட்டில் கட்டும் கொக்கி கம்பி அவனுடைய வலது கழுத்து பகுதியில் குத்தி வலது காது வழியாக வெளியே வந்தது. இதில் ரத்தம் வெளியேறி சிறுவன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக சிறுவனை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்தனர். அங்கு சிறுவனை குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அனுமதித்து சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்தனர்.
அதில் சிறுவனின் கழுத்து பகுதியில் குத்திய கம்பியானது 12 மி.மீ. அகலமும், 2 அடி நீளமும் உள்ள கொக்கி கம்பி என்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து கொக்கி கம்பியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.
தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் காளிதாஸ் அறிவுறுத்தலின்படி, குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ரங்கராஜன் தலைமையில் டாக்டர்கள் தர்மேந்திரா, முத்துலிங்கம், செந்தில்குமார், சீனிவாசன் மற்றும் மயக்கவியல் துறை தலைவர் ஜெய சங்கர நாராயணன், வசந்தி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் வெற்றிகரமாக சிறுவனின் கழுத்து பகுதியில் சிக்கியிருந்த கொக்கி கம்பியை அகற்றி சாதனை படைத்தனர். தற்போது அந்த சிறுவன் உடல்நிலை தேறி நல்ல நிலையில் உள்ளான். சாதனை படைத்த டாக்டர்கள் குழுவினரை டீன் காளிதாஸ் பாராட்டினார்.
Related Tags :
Next Story