நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர்: ஜான் சல்லீவனின் 232-வது பிறந்த நாள் விழா - சிலைக்கு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவிப்பு


நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர்: ஜான் சல்லீவனின் 232-வது பிறந்த நாள் விழா - சிலைக்கு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 15 Jun 2020 10:00 PM GMT (Updated: 16 Jun 2020 4:23 AM GMT)

நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரான ஜான் சல்லீவனின் 232-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் ஜான் சல்லீவன். இவரே ஊட்டி நகர் மற்றும் ஏரியை நிர்மாணித்தவரும் ஆவார். இவரது நினைவகம், கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு கிராமத்தில் உள்ளது. மேலும் உருவச்சிலையும் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஜான் சல்லீவனின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் விழா, நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஜான் சல்லீவனின் 232-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி கன்னேரிமுக்கு கிராமத்தில் உள்ள நினைவகத்தில் அவரது உருவச்சிலைக்கு, தற்போதைய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

இங்கு தமிழக அரசின் சிறப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சம் செலவில், ஜான் சல்லீவன் நினைவு பூங்கா அமைக்கும் பணி தொடங்கியது. அவரது பிறந்த நாளான இன்று(அதாவது நேற்று) பூங்காவை திறக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல், ஊரடங்கு உத்தரவு ஆகிய காரணங்களால் பணி பாதிக்கப்பட்டது. அடுத்த 2 மாதங்களுக்குள் பணியை முடித்து, பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். விழாவில் நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், தாசில்தார் மோகனா, வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன் மற்றும பலர் கலந்துகொண்டனர். வழக்கமாக ஜான் சல்லீவன் பிறந்த நாள் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பீதியால், குறைந்த அளவிலான பொதுமக்களே நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story