கொரோனாவால் பாதிக்கப்பட்ட பா.ஜனதா முன்னாள் எம்.பி. ஹரிபாவு ஜவலே மரணம்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பா.ஜனதா முன்னாள் எம்.பி. ஹரிபாவு ஜவலே சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
மும்பை,
மராட்டிய பாரதீய ஜனதாவின் ஜல்காவ் மாவட்ட தலைவரும், அக்கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான ஹரிபாவு ஜவலேவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் ஹரிபாவு ஜவலேவுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.
இதையடுத்து அவர் மும்பை அழைத்து வரப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஹரிபாவு ஜவலே உயிரிழந்தார். அவருக்கு வயது 67. மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலியான மூத்த அரசியல் தலைவர் ஹரிபாவு ஜவலே ஆவார்.
ஊசி மருந்து கிடைக்காததால் உயிரிழப்பு
இந்தநிலையில் ஹரிபாவு ஜவலேவுக்கு ரெம்டெசிவிர் ஊசி மருந்து டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த மருந்து சரியான நேரத்தில் கிடைக்காததால் தான் அவர் உயிரிழக்க நேரிட்டதாகவும் பாரதீய ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே குற்றம் சாட்டி உள்ளார். கடந்த 13-ந் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கொரோனா சிகிச்சைக்காக திருத்தப்பட்ட வழிகாட்டுதலில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவசரகாலத்தில் ரெம்டெசிவிர் ஊசி மருந்தை பயன்படுத்த பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story