மாவட்டத்தில், பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு


மாவட்டத்தில், பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
x
தினத்தந்தி 16 Jun 2020 9:45 PM GMT (Updated: 16 Jun 2020 11:45 PM GMT)

சேலம் மாவட்டத்தில் பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சேலம்,

எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச்செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின் படி, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காரீப் 2020 பருவத்தில் நெல் (கார்), மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, பருத்தி, நிலக்கடலை, வெண்டை, வெங்காயம், தக்காளி, மஞ்சள் பயிர்களுக்கு ஜூலை 31-ந் தேதி வரையிலும், ராகி, சோளம், சாமை பயிர்களுக்கு ஆகஸ்டு 16-ந் தேதி வரையிலும் வாழை, மரவள்ளி, பயிர்களுக்கு ஆகஸ்டு 31-ந் தேதி வரையிலும், துவரைக்கு செப்டம்பர் 15-ந் தேதி வரையிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்.

தோட்டக்கலை பயிர்கள் மற்றும் பருத்திக்கு 5 சதவீதம் பிரிமீயத்தொகையும், இதர வேளாண்மை பயிர்களுக்கு பயிர்காப்பீட்டுத் தொகையில் 2 சதவீதம் பிரிமீயத்தொகையும் செலுத்த வேண்டும். பிரிமீயத்தொகை ஒரு ஏக்கருக்கு நெல்(கார்) ரூ.620, மக்காச்சோளம் ரூ.302, பயறுவகை பயிர்கள் ரூ.256, பருத்தி ரூ.621, நிலக்கடலை ரூ.381, ராகி ரூ.177, சோளம் ரூ.159, சாமை ரூ.158, வாழை ரூ.3 ஆயிரத்து 230, வெண்டைக்காய் ரூ.1,168, வெங்காயம் ரூ.1,828, மரவள்ளி ரூ.2 ஆயிரத்து 100, தக்காளி ரூ.920, மஞ்சள் ரூ.3 ஆயிரத்து 685 ஆகும்.

அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா என்ற முகமையின் மூலம் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயிர்களுக்கு பயிர்காப்பீடு செய்ய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகலாம்.

சேலம் மாவட்ட விவசாயிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அடங்கல், நில உரிமை பட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தகக்துடன் நேரில் அணுகி உரிய பிரீமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விதைப்பிற்கு முன்னரே பயிர் காப்பீடு செய்ய கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து “விதைப்பு செய்ய இருக்கிறார்” என விதைப்புச்சான்று பெற்றும் காப்பீடு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். பயிர் காப்பீட்டு விவரங்களை உழவன் செயலியில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story