ஓசூரில் வடமாநில வாலிபரை கொல்ல முயற்சி: பாலிடெக்னிக் மாணவர்கள் உள்பட 4 பேர் கைது


ஓசூரில் வடமாநில வாலிபரை கொல்ல முயற்சி: பாலிடெக்னிக் மாணவர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jun 2020 3:15 AM IST (Updated: 17 Jun 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் வடமாநில வாலிபரை கொல்ல முயன்றதாக பாலிடெக்னிக் மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்,

ஜார்கண்ட் மாநிலம் அசாரிபோகி உரிமாரி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவன் குமார் (வயது 26). இவர் ஓசூரில் சிப்காட் பேடரப்பள்ளி ராஜாஜி நகரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வெல்டராக வேலை செய்து வருகிறார். இவரும், ஓசூர் பேடரப்பள்ளி ராஜாஜி நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் (24) என்பவரும் நண்பர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி சஞ்சீவன் குமார், சந்தோஷ்குமார் ஆகிய 2 பேரும் கிரிக்கெட் விளையாடுவதற்காக அந்த பகுதியில் உள்ள மைதானத்திற்கு சென்றனர். அப்போது சஞ்சீவன்குமார் உடைந்த பீர்பாட்டில் ஒன்றை அங்கிருந்து எடுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு சுவரில் எறிந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அங்கிருந்த ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரேணுகுமார் என்கிற ருத்ரப்பா (19) மற்றும் அவருடன் இருந்தவர்கள் கேட்டனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ரேணுகுமார் தரப்பினர், சஞ்சீவன்குமாரை தாக்கினார்கள். மேலும் அவர்கள் கிரிக்கெட் பேட் மற்றும் பீர் பாட்டிலால் சஞ்சீவன்குமாரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சந்தோஷ்குமார் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ரேணுகுமார் மற்றும் பெங்களூரு ஆனேக்கல் கவசஹள்ளியை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஈசாக் (20), ஓசூர் கோவிந்த அக்ரஹாரத்தை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி 18 வயதுடைய மாணவர், ஓசூர் பேடரப்பள்ளி ராஜாஜி நகரை சேர்ந்த பழனி (21) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story