கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று வெள்ளியணையில் ரெயில்வே ஊழியர் பாதிப்பு


கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று வெள்ளியணையில் ரெயில்வே ஊழியர் பாதிப்பு
x
தினத்தந்தி 17 Jun 2020 5:50 AM IST (Updated: 17 Jun 2020 5:50 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வெள்ளியணையில் ரெயில்வே ஊழியர் பாதிக்கப்பட்டார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், படிப்படியாக குணம் அடைந்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஏற்கனவே, கரூர் மாவட்டத்தை சேர்ந்த 11 பேர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் என 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று பள்ளபட்டியை சேர்ந்த 2 பேருக்கும், தாந்தோணிமலை பகுதிக்கு உட்பட்ட முத்தாளம்பட்டியை சேர்ந்த 3 பேருக்கும் கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த 2 பேர் மற்றும் கந்தபொடிகார தெரு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் நோய் தொற்று கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 14 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று 8 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டு உள்ளதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

ரெயில்வே ஊழியர்

மேலும், வெள்ளியணை ரெயில் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், ஊரடங்கு உத்தரவுக்கு முன்னதாக தனது சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு சென்றிருந்தார். பின்னர், அங்கேயே அவர் தங்கி விட்டார். தற்போது ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் உத்தர பிரதேசத்தில் இருந்து வெள்ளியணைக்கு வந்தார்.

முன்னதாக அவர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனது ரத்த மாதிரியை பரிசோதனைக்கு கொடுத்திருந்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து வெள்ளியணை வந்த சுகாதார பணியாளர்கள் ரெயில்வே ஊழியரை அழைத்துச்சென்று கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கிருமி நாசினி தெளிப்பு

இதனையடுத்து வெள்ளியணை ரெயில் நிலையம், ரெயில்வே குடியிருப்பு, அதன் அருகில் உள்ள முருகன் கோவில் தெரு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், மருத்துவ குழுவினர், ஊராட்சி நிர்வாகத்தினர் அந்தப் பகுதியில் முகாமிட்டு பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா? என்று பரிசோதனை செய்து வருகின்றனர்.

அவர்களுக்கு சத்து மாத்திரைகள், கபசுர குடிநீரும் வழங்கி வருகின்றனர். இந்தப் பணிகளை உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக், வெள்ளியணை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சாந்தி மற்றும் மருத்துவ பணியாளர்கள், ஊராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

Next Story