கொரோனா பரவலை தடுக்க ஆந்திர எல்லை மூடல்


கொரோனா பரவலை தடுக்க ஆந்திர எல்லை மூடல்
x
தினத்தந்தி 17 Jun 2020 2:11 AM GMT (Updated: 17 Jun 2020 2:11 AM GMT)

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஆந்திர எல்லை மூடப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை நகரம் தமிழக எல்லையில் உள்ளது. இங்கு திருப்பதி ரோடு, சத்தியவேடு ரோடு பகுதிகளில் ஆந்திர எல்லைகள் ஆரம்பம் ஆகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி நாடு தழுவிய ஊரடங்கு அறிவித்தபோது இந்த 2 எல்லைகளையும் போலீசார் மூடி விட்டனர். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொ டர்ந்து எல்லைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் ஊத்துக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. மேலும் ஆந்திர எல்லை பகுதியில் உள்ள சத்தியவேடு சுற்று வட்டாரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி 100-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் சத்தியவேடு பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சத்தியவேடு பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த பகுதியில் இருந்து ஏராளமானோர் ஊத்துக்கோட்டை வந்து செல்வதால் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறையினர் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து நேற்று சத்தியவேடு பகுதியில் ஆந்திர எல்லை மூடப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சத்தியவேடு பகுதியில் இருந்து வந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.

Next Story