கிணத்துக்கடவு அருகே பரிதாபம்: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி


கிணத்துக்கடவு அருகே பரிதாபம்: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 17 Jun 2020 10:39 AM IST (Updated: 17 Jun 2020 10:39 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கிணத்துக்கடவு, 

திருப்பூர் மாவட்டம் வேலவம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் உதயகுமார்(வயது 45). இவருடைய மனைவி லதா(35). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து, அதற்கு சுதன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். தற்போது குழந்தைக்கு 2 வயது ஆகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயகுமார் திருப்பூரில் புதிய வீடு கட்டினர். இதன் கிரக பிரவேச விழாவுக்கு கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளத்தில் வசித்து வரும் லதாவின் தாயார் சுசீலா சென்றார். அங்கிருந்து பேரனான சுதனை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டின் முன்பகுதியில் சுதன் பந்தை உதைத்து விளையாடி கொண்டு இருந்தான். அப்போது அங்குள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் பந்து விழுந்தது. அதை எடுக்க முயன்ற சுதன், எதிர்பாராதவிதமாக தொட்டிக்குள் தவறி விழுந்தான். தொடர்ந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதற்கிடையில் அங்கு வந்த சுசீலா, தண்ணீர் தொட்டிக்குள் சுதன் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், சுதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story