அவினாசி அருகே, பழமையான தானியக்குழி கண்டுபிடிப்பு


அவினாசி அருகே, பழமையான தானியக்குழி கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 17 Jun 2020 7:00 AM GMT (Updated: 2020-06-17T12:30:18+05:30)

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள கருவலூரில் உள்ள வேணுகோபால்சாமி கோவில் அருகில் உழவுப்பணியின் போது சுமார் 200 ஆண்டுகள் பழமையான பண்டைய தானியக்குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதைப்பற்றி வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் பொறியாளர் அ.ரவிக்குமார் கூறியதாவது:-

இங்கு புஞ்சைப்பயிர் வெள்ளானம் முக்கிய மகசூல்களில் ஒன்றாகும். வானம் பார்த்த இம்பூமியில் விளையும் மானாவாரியான காட்டுப்பயிர்கள் விவசாயிகளுக்கு பல வழிகளில் உதவி புரிகின்றன. கம்பு, சோளம், கேழ்வரகு, பச்சைப்பயிறு, திணை போன்ற பயிர்கள் மழையை நம்பியும், கிணற்றுப்பாசனத்தை நம்பியும் அன்று முதல் இன்றுவரை பயிர் செய்யப்பட்டு வருகின்றன.

பண்டைய தமிழ்ச்சமூகம் ஒரு பொது உடைமை சமூகமாகத்தான் விளங்கியது. கிராம மக்கள் தங்கள் விளைநிலங்களில் விளையும் தானியங்களின் ஒரு பகுதியை கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு வழங்கும் மரபு பண்பு இருந்தது. அன்றைய காலகட்டத்தில் கோவில்தான் கருவூலங்களாகவும், சமுதாயக்கூடமாகவும் செயல்பட்டு வந்தன. இவ்வாறு கோவில்களுக்கு வழங்கப்படும் தானியங்கள் தானியக்கிடங்குகளில் சேமிக்கப்பட்டு வந்தன. கடுமையான கோடை காலங்களிலும், வானம் பொய்க்கும் காலங்களிலும் இந்த தானியங்கள் ஊர்ச்சபை மூலம் மக்களுக்கு வழங்கப்படும்.

இது புராதனகூட்டு சமூக வாழ்க்கைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும் பஞ்ச காலங்களில் இங்கு அன்னதானமும் நடைபெற்று வந்துள்ளது. இவ்வாறு நல்ல மழைக்காலங்களில் அதிகமாக விளையும் தானியங்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நிலத்தின் ஒரு பகுதியில் பானை வடிவில் சுமார் 5 அடி ஆழத்துக்கு குழி தோண்டிச்சுற்றியும் அந்த பகுதிகளில் கிடைக்கும் கருங்கல், அல்லது ஓடைக்கற்களை பாவி தானியங்களை சேமித்து வைப்பார்கள்.

இது கோவில் நிலங்களிலும் தனியார் விவசாயப்பூமியிலும் ஏற்படுத்தப்படும். இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட தானியக்குழிகள் தற்போது விவசாய பெருங்குடி மக்கள் தங்கள் நிலங்களில் மேற்கொள்ளும் வேளாண் நடவடிக்கையின்போது வெளிப்பட்டு வருகின்றன. இதை சோளக்குழி என்று கிராமங்களில் அழைக்கின்றனர். அவற்றில் ஒன்றுதான் நமது கருவலூரில் விவசாய நிலத்தில் கிடைத்துள்ளது. இதுசுமார் 200 ஆண்டுகள் பழமையானதாகும்.

மேலும் அவர் கூறுகையில் திருப்பூர் வாவிபாளையத்தில் இருந்து சேடர்பாளையம் செல்லும் வழியில் உள்ள செட்டிப்பாளையத்தில் மிகப்பழமையான ஊர்ச்சாவடி உள்ளது. இது 6 தூண்களுடன் இருப்பதால் இப்பகுதி மக்கள் ஆறுகால் சாவடி என்று அழைக்கின்றனர். ஊர்மக்கள், கிராம மக்கள் அளவிலான தங்கள் தேவைகள், பிரச்சினைகளை பேசி தீர்க்கும் இடமாக ஊர்ச்சாவடிகள் இருந்தன. செட்டிப்பாளையத்தில் உள்ள ஊர்ச்சாவடி 30 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். தமிழர் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் சாட்சியாக இது உள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் தொழிலாளர்களுக்கு இங்கு வைத்து சம்பளம் வழங்குவது கோடை காலங்களில் அவ்வழியாக வருவோருக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர்பந்தல்களும் அமைக்கப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது. வெளியூர் செல்லும் பயணிகள் இரவில் தங்கவும் இச்சாவடியை பயன்படுத்தி உள்ளதாகவும் குறிப்புகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story