மாமூல் வசூலிப்பதில் தகராறு ரவுடி வெட்டிக்கொலை 10 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு


மாமூல் வசூலிப்பதில் தகராறு ரவுடி வெட்டிக்கொலை 10 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Jun 2020 12:00 AM GMT (Updated: 17 Jun 2020 9:39 PM GMT)

எண்ணூர் பகுதியில் மாமூல் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறில் ரவுடியை வெட்டிக்கொலை செய்த 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவொற்றியூர்,

சென்னை எண்ணூரை அடுத்த எர்ணாவூர் கன்னிலால் லே-அவுட் பகுதியில் வசித்து வந்தவர் சின்னமுத்து(வயது 45). பிரபல ரவுடியான இவர் மீது எண்ணூர், சாத்தாங்காடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு சின்னமுத்து, எர்ணாவூர் காந்திநகர் அருகே சாலையில் தனது நண்பர்களான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ராயபுரம் பகுதி செயலாளர் பைலட் பிரேம்குமார், அப்பு ஆகியோருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

வெட்டிக்கொலை

அப்போது 2 ஆட்டோக்களில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் சின்னமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் தலை, கை, கால்களில் பலத்த வெட்டு விழுந்தது. மேலும் முகம் முழுவதும் சிதைந்த நிலையில் நிலைகுலைந்து கீழே விழுந்த சின்னமுத்து, ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் ரவாளிபிரியா மற்றும் போலீசார் கொலையான சின்னமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் கொலையாளிகள் விட்டுச்சென்ற ஆயுதங்களை கைப்பற்றினர்.

மாமூல் வசூலிப்பதில் தகராறு

சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த பாம்பு நாகராஜ் என்ற ரவுடிக்கும், ரவுடி சின்னமுத்துக்கும் மாமூல் வசூலிப்பதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக ரவுடி பாம்பு நாகராஜ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சின்னமுத்துவை வெட்டிக்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக பாம்பு நாகராஜின் கூட்டாளி தங்கமுத்து (21) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலையாளிகள் வந்த ஒரு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும் எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் உக்கிரபாண்டியன், இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் தனிப்படை அமைத்து 10 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Next Story