கடன் தவணை வசூலிக்க வந்த ஊழியர்களை மகளிர் குழுவினர் முற்றுகை


கடன் தவணை வசூலிக்க வந்த ஊழியர்களை மகளிர் குழுவினர் முற்றுகை
x
தினத்தந்தி 18 Jun 2020 12:26 AM GMT (Updated: 18 Jun 2020 12:26 AM GMT)

கடன் தவணை வசூலிக்க வந்த ஊழியர்களை மகளிர் குழுவினர் முற்றுகையிட்டனர்.

திருச்சி,

கொரோனா வைரஸ் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியானது கூட்டுறவு வங்கி, கிராமப்புற வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள், வங்கி அல்லாத நிறுவனங்கள் பயிர்கடன் உள்ளிட்ட அனைத்து விதமான கடன்களுக்கும் தவணை தொகை செலுத்துவதை ஆகஸ்டு மாதம் வரை தள்ளி வைத்துள்ளது. ஆனால் சில நிறுவனங்கள் வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்த கட்டாய படுத்தி வருகின்றன.

மகளிர் சுய உதவிக்குழு

இந்தநிலையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 41-வது வார்டு கிராப்பட்டியில் 350 மகளிரை உறுப்பினர்களாக கொண்ட மகளிர்குழு சிறு, குறு தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடன்களை பெற்று மாத தவணையை செலுத்தி வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மகளிர் குழுவினர் வேலையின்றியும், வருமானம் இன்றியும் தவித்து வருகிறார்கள்.

இதனால் கடனுக்கான தவணை செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். அதே வேளையில் கடன் கொடுத்த நிறுவனம் கறாராக வசூலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.

ஊழியர்களை முற்றுகை

இந்த நிலையில் நேற்று கிராப்பட்டி கான்வென்ட் தெருவில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர், மகளிர் குழுவினரிடம் தவணை தொகை வசூலிக்க வந்தனர். அவர்களை மகளிர்குழுவினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசே ஆகஸ்டு மாதம்வரை தவணை தொகையை செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது என்று அறிவித்தும் மிரட்டி தவணை தொகையை வசூலிக்கலாமா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஊழியர்கள் தரப்பில், எங்கள் வேலையைத்தான் செய்கிறோம். தவணையை முறையாக செலுத்தினால் வட்டி மற்றும் அபராதம் விதிப்பில் இருந்து தப்பலாம் என தெரிவித்தனர். இதனால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமையை புரிந்து கொண்ட ஊழியர்கள் நைசாக அங்கிருந்து சென்று விட்டனர்.

Next Story