கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 47.81 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.956 கோடி வினியோகம் - முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்


கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 47.81 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.956 கோடி வினியோகம் - முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
x
தினத்தந்தி 17 Jun 2020 11:00 PM GMT (Updated: 18 Jun 2020 1:27 AM GMT)

கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 47.81 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.956 கோடி வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

ஒரு தனியார் நிறுவனம், விவசாயிகளுக்கு இலவச விதைகள் வழங்கும் நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள முதல்-மந்திரியின் கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு விதைகளை வழங்கி பேசும்போது கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தின் மீதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், விவசாயம் செய்ய புலம் பெயர்ந்த தொழிலாளர்களை நம்பி இருந்தனர். கொரோனா காரணமாக தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் விவசாயிகளுக்கு அனைத்து ரீதியிலான உதவியும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ ரூ.2,284 கோடி தொகுப்பு திட்டத்தை அறிவித்து, செயல்படுத்தியுள்ளேன். பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் கர்நாடக அரசு 47.81 லட்சம் விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டிற்கான 2-வது தவணை தலா ரூ.2,000 வீதம் ரூ.956 கோடி வினியோகம் செய்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட பூ விவசாயிகளுக்கு எக்டேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பருவமழை பெய்ய தொடங்கியுள்ளதால் விவசாயிகள் விவசாய பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான விவசாய உபகரணங்கள், விதைகள், உரங்கள், நல்ல விளைச்சல் கிடைக்க தேவையான நவீன ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story