சீனாவை கண்டித்து பா.ஜ.க.-இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சீனாவை கண்டித்து பா.ஜ.க.-இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2020 10:00 PM GMT (Updated: 18 Jun 2020 1:27 AM GMT)

சீனாவை கண்டித்து கோவையில் பா.ஜ.க.,- இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சீன கொடியை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

இந்தியாவின் லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் இடையே கடந்த 16-ந் தேதி இரவு திடீர் மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதேபோல் சீனா தரப்பிலும் 43 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் சீனாவின் மோதல் போக்கை கண்டித்து பா.ஜ.க. சார்பில் கோவை வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீன நாட்டு வரைபடம், சீனா தேசிய கொடியை கிழித்து, தீயிட்டு எரிக்க முயன்றனர். அத்துடன் சீனா நாட்டின் தயாரிப்பான செல்போனையும் கீழே போட்டு உடைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதேபோல் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவர் பிரசன்னசாமி தலைமை தாங்கினார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீனா கொடியை எரிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் இருந்து கொடியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்தனர்.

Next Story