பீதர் அருகே சம்பவம் மணமகனுக்கு கொரோனா பாதிப்பு - திருமணம் நடந்த சில மணிநேரத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதி


பீதர் அருகே சம்பவம் மணமகனுக்கு கொரோனா பாதிப்பு - திருமணம் நடந்த சில மணிநேரத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 18 Jun 2020 3:45 AM IST (Updated: 18 Jun 2020 7:04 AM IST)
t-max-icont-min-icon

பீதர் அருகே மணமகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமணம் நடந்த சில மணிநேரத்தில் அவர் ஆஸ்பத்திரியிலல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பீதர்,

பீதர் மாவட்டம் பசவகல்யாண் அருகே போலூர் கிராமத்தில் 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர், மராட்டிய மாநிலம் புனேயில் வேலை செய்கிறார். கொரோனா காரணமாக புனேயில் இருந்து கடந்த மாதம் (மே) 19-ந் தேதி பசவகல்யாணுக்கு அந்த வாலிபர் வந்தார். மராட்டியத்தில் இருந்து வந்ததால், அவர் அரசு பள்ளியில் தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டார். அதே நேரத்தில் வாலிபருக்கும், ஒரு பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை வாலிபரின் பெற்றோர் கவனித்து வந்தனர்.

பின்னர் மே 30-ந் தேதி தனிமை முகாமில் இருந்து அந்த வாலிபர் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். அவ்வாறு வீட்டுக்கு செல்லும் முன்பாக கொரோனா பரிசோதனைக்காக வாலிபரின் ரத்தமாதிரி உள்ளிட்டவை எடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், கடந்த 15-ந் தேதி ஏற்கனவே திட்டமிட்டபடி அந்த வாலிபருக்கும், இளம்பெண்ணுக்கும் பால்கி தாலுகா கோன் மேலுகுந்தா கிராமத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் தனது மனைவியை தன்னுடைய வீட்டுக்கு வாலிபர் அழைத்து வந்தார். இதற்கிடையில், மணமகனான வாலிபருக்கு நடத்தப்பட்டு இருந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வாலிபரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆம்புலன்சுடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டுக்கு சென்றனர். ஆனால் வாலிபரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் நீண்ட நேர போராட்டத்தை தொடர்ந்து அந்த வாலிபரை ஆஸ்பத்திரிக்கு அதிகாரிகள் அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமணமான சில மணிநேரத்திலேயே மணமகனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பீதரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் தனிமை முகாமில் இருந்து சென்ற பின்பு 2 வாரங்கள் கழித்து வாலிபருக்கு கொரோனா தொற்று எப்படி? ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் மணமகள், திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் என பலரையும் கண்டறிந்து சுகாதார துறையினர் தனிமைப்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Story