கோரிமேடு, முள்ளோடை, மதகடிப்பட்டு, கனகசெட்டிக்குளம் புதுவை மாநில எல்லைகள் மூடப்பட்டன - போலீஸ் கெடுபிடி; தமிழக வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
கோரிமேடு, முள்ளோடை, மதகடிப்பட்டு, கனகசெட்டிக்குளம் ஆகிய எல்லைகள் மூடப்பட்டன. போலீசாரின் கெடுபிடியால் தமிழகத்தில் இருந்து வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
புதுச்சேரி,
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் நோயின் தாக்கம் குறையாததால் அடுத்தடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 5-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.
முதன் முதலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது மாநில எல்லைகள் மூடப்பட்டன. தமிழக பகுதியில் இருந்து புதுவைக்கு வரும் 80-க்கும் மேற்பட்ட குறுக்கு சாலைகளும் சீல் வைக்கப்பட்டன. அதேநேரத்தில் மருத்துவம் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
இதன்பின் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், மாநில எல்லைகளில் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டது. புதுவையில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10-க்கும் குறைவாகவே இருந்த கொரோனா பாதிப்பு, ஊரடங்கு தளர்வுக்குப் பின் வேகமெடுக்க ஆரம்பித்தது. தற்போது தினமும் 10-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். அதன்படி புதுவை மாநிலத்தில் நேற்று வரை 245 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் புதுவைக்கு திரும்புபவர்களால் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதாகவும், இதேநிலை நீடித்தால் அடுத்த மாதத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர்.
இதற்கிடையில் சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாளை (வெள்ளிக்கிழமை) முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் சென்னையில் வசித்து வரும் புதுவையை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு வரலாம் என்பதால் அவர்கள் மூலம் தொற்று பரவாமல் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தியது. இதையடுத்து மாநில எல்லைகளை சீல் வைப்பது, இ-பாஸ் வைத்திருந்தாலும் சென்னையில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி இல்லை. கடலூர், விழுப்புரத்தில் இருந்து மருத்துவ தேவைக்காக வருபவர்களை மட்டும் அனுமதிப்பது, மற்றவர்களை அனுமதிக்கக் கூடாது என முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.
இதன் காரணமாக நேற்று அதிகாலை முதல் புதுவை மாநில எல்லைகளான கோரிமேடு, முள்ளோடை, மதகடிப்பட்டு, கனகசெட்டிக்குளம் ஆகிய நுழைவுவாயில்கள் மூடப்பட்டன. புதுவை - திண்டிவனம் சாலையில் உள்ள கோரிமேடு எல்லையில் தமிழகத்தில் இருந்து வந்த பொதுமக்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இ-பாஸ் வைத்திருப்பவர்களிடம் விசாரித்து சரியான காரணம் இல்லாமல் இருப்பது தெரியவந்தால் அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் எல்லை பகுதியில் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் புதுவைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்காக இ-பாசுடன் வந்தவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கான உரிய ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அந்த வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
புதுச்சேரி - கடலூர் சாலையில் முள்ளோடை எல்லையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டுகள் சுப்ரமணியன், ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், தனசேகரன், தன்வந்திரி மற்றும் போலீசார், மருத்துவக்குழுவினர் எல்லையை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடலூரில் இருந்து புதுவைக்கு வர முயன்ற வாகனங்களை தடுத்து நிறுத்தினர். மருத்துவ சிகிச்சைக்காக இ-பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மற்ற தேவைக்காக இ-பாஸ் வைத்திருந்தவர்களும், இ-பாஸ் இல்லாமல் வர முயன்றவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி - விழுப்புரம் எல்லையான மதகடிப்பட்டு பகுதியில் ஐ.ஆர்.பி.என். உதவி கமாண்டன்ட் ராஜேஷ், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர வல்லாட் ஆகியோர் தலைமையில் உள்ளூர் போலீசார், ஐ.ஆர்.பி.என். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழுப்புரம் பகுதியில் இருந்து வந்தவர்களை தடுத்து நிறுத்தி, உரிய அனுமதி இல்லாதவர்களை திரும்பிச் செல்லுமாறு எச்சரித்தனர்.
ஆனால் அங்கிருந்து போக மறுத்து அவர்கள் அந்த இடத்திலேயே நின்றனர். இதையடுத்து ஒருசில மோட்டார் சைக்கிள்களின் முகப்பு விளக்குகளின் கண்ணாடியை போலீசார் லத்தியால் அடித்து நொறுக்கினர். இதையடுத்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் புதுவை - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காலாப்பட்டு அருகே கனகசெட்டிக்குளம் எல்லை தடுப்புகளால் சீல் வைக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக வந்த கார், லாரி, இருசக்கர வாகனங்கள் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
இதில் மருத்துவ சிகிச்சைக்காக வந்தவர்களை ஏற்றிவந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஆதார் கார்டு காண்பித்தால் மருத்துவ பரிசோதனைக்குப்பின் அனுமதிக்கப்பட்டனர். அதே வேளையில் புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு சென்றவர்கள் மீண்டும் உள்ளே அனுமதிப்பதில்லை எனவும் போலீசார் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
திருக்கனூர் எல்லை மூடப்பட்டதால், அந்த வழியாக வந்த தமிழக அரசு பஸ் தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் வந்த பயணிகள் அனைவரும் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் பல கி.மீ. தூரம் நடந்தே அவரவர் ஊர்களுக்கு சென்றனர். மாநில எல்லைகள் திடீரென்று மூடப்பட்டதால், தமிழக பகுதியில் இருந்து கட்டுமானம், தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு வந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு சிலர் கிராமப்புற குறுக்கு சாலைகள் வழியாக புதுவைக்கு வந்தனர்.
Related Tags :
Next Story