கடலூர், சிதம்பரத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்


கடலூர், சிதம்பரத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2020 10:00 PM GMT (Updated: 18 Jun 2020 4:10 AM GMT)

கடலூர், சிதம்பரத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்,

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் நியாய விலைக்கடை பணியாளர்களை உடனடியாக தமிழக அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில், நியாய விலைக்கடை பணியாளர் சங்க பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அம்பலத்தாடி தெருவில் உள்ள ரேஷன் கடையில் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

இதில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா, மாநில துணைத் தலைவர் துரைசேகர், மாவட்ட துணைத்தலைவர் நரசிம்மன், நகர பொறுப்பாளர்கள் யோகராஜ், கனகசபை, தட்சிணாமூர்த்தி, சுரேஷ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு கருப்பு சட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரிலும் நேற்று ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story