தேனி மாவட்டத்தில், அரசு டாக்டர் உள்பட 8 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் அரசு டாக்டர் உள்பட மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி,
தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 167 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மதுரையை சேர்ந்தவர். இவருடைய மைத்துனர் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்புக்குள்ளானார். இதையடுத்து டாக்டருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதேபோல், பெரியகுளம் வடகரை சுப்பிரமணியன்பிள்ளை சாவடி தெருவை சேர்ந்த 48 வயது பெண், தேனி அருகே அம்பாசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு யார் மூலம் பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரியவில்லை. அம்பாசமுத்திரத்தை சேர்ந்த நபர் தேனி-மதுரை சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வந்தார்.
மேலும் சென்னையில் உள்ள ஒரு கார் விற்பனை நிறுவனத்தில் பணியாற்றிய உத்தமபாளையத்தை சேர்ந்த 26 வயது வாலிபர் சொந்த ஊருக்கு திரும்பி வந்த நிலையில், சோதனை சாவடியில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதேபோன்று லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் 40 வயது ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ஊழியர் சில நாட்களுக்கு முன்பு லோயர்கேம்ப்பில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமிற்கு சென்று வந்துள்ளார். அதுபோல், ஏற்கனவே கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் தொழிலாளியின் மாமியார் மற்றும் மைத்துனரின் மனைவி ஆகிய 2 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் தேனியை அடுத்த பொம்மையகவுண்டன்பட்டி பாலன்நகரை சேர்ந்த 10 வயது சிறுமிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story