மகன் கண்முன் பரிதாபம்: மொபட் மீது வாகனம் மோதி தொழிலாளி பலி
நிலக்கோட்டை அருகே மொபட் மீது வாகனம் மோதியதில் மகன் கண்முன்னே தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
நிலக்கோட்டை,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 50). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் சிவமாரிமுத்து (12). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தான். இந்தநிலையில் நேற்று அதிகாலை ரத்தினவேல், தனது மகனை அழைத்துக்கொண்டு, அய்யம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
இவர்கள் 2 பேரும் நிலக்கோட்டை அருகே திரவியம்நகர் பகுதியில் வந்தபோது, எதிரே அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வேகமாக வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த வாகனம், ரத்தினவேல் சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரத்தினவேல் மற்றும் சிவமாரிமுத்து ஆகிய 2 பேரும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், விபத்தில் சிக்கிய தந்தை-மகனை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ரத்தினவேல் மட்டும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துபோனார்.
அவரது மகன் சிவமாரிமுத்துவுக்கு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேசுவரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மகன் கண்முன் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story