வேலூர் மாவட்டத்தில், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 59 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 320 ஆக உயர்வு
வேலூர் பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், சத்துவாச்சாரி போக்குவரத்து தலைமை ஏட்டு உள்பட 59 பேருக்கு ஒரேநாளில் கொரோனா உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் 55 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர் அரியூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் முதல் பணியாற்றி வந்தார். அவருக்கு கொரோனா தொற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதியானது. அந்த பெண் போலீஸ் பாகாயம் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். அதைத்தொடர்ந்து போலீஸ் குடியிருப்பில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் பக்கத்து வீடுகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வந்தன. அதில், பெண் போலீசின் தாயார், பக்கத்து வீட்டில் வசிக்கும் போலீஸ்காரரின் 2 குழந்தைகள், மற்றும் அதே குடியிருப்பில் வசிக்கும் வேலூர் பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், சத்துவாச்சாரி போக்குவரத்து தலைமை ஏட்டு உள்பட 4 பேருக்கும் கொரோனா உறுதியானது.
அதைத்தொடர்ந்து போலீஸ் குடியிருப்பு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் சப்-இன்ஸ்பெக்டர் பணியாற்றிய பாகாயம் போலீஸ் நிலையத்திலும், தலைமை ஏட்டு பணியாற்றிய சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அங்குள்ள போலீஸ்காரர்கள் மற்றும் அவருடன் பழகிய நபர்களுக்கும் சளிமாதிரி சேகரிக்கப்பட்டன.
இதற்கிடையே பாகாயம் சப்-இன்ஸ்பெக்டர் நேற்று முன்தினம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து சென்றுள்ளார். அதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு பாகாயம் போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
பழைய காட்பாடி புருசோத்தமன்நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தை உள்பட 4 பேருக்கும், அதே பகுதி வி.கே.டி. தெருவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கும், பேரணாம்பட்டு வி.கோட்டாவை சேர்ந்த தம்பதியினருக்கும், கஸ்பா போலீஸ் குடியிருப்பை வசிக்கும் 29 வயது பெண்ணுக்கும், நேதாஜி மார்க்கெட்டில் பணிபுரிந்த நேதாஜி விளையாட்டு மைதானம் அருகே வசிக்கும் 22 வயது வாலிபர் உள்பட 2 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த தெருக்கள் சீல் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் காய்ச்சல் அறிகுறி காணப்படும் நபர்களின் சளிமாதிரி சேகரிக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story