திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் பணியில் சேர்ந்த 3 நாட்களில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா - போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டன


திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் பணியில் சேர்ந்த 3 நாட்களில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா - போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 18 Jun 2020 12:18 PM IST (Updated: 18 Jun 2020 12:18 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை போலீஸ் நிலையங்களில் பணியில் சேர்ந்த 3 நாட்களில் 2 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டன.

திருப்பத்தூர், 

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலூர் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று, திருப்பத்தூர் தாலுகா போலீசில் 15-ந்தேதி பணி அமர்த்தப்பட்டார். அவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் வெளியேற்றப்பட்டனர்.

போலீஸ் நிலையம் முழுவதும் திருப்பத்தூர் நகராட்சி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், இன்ஸ்பெக்டர் மதனலோகன் ஆகியோர் நேரில் சென்று தாலுகா போலீஸ் நிலையத்தில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து, தாலுகா போலீஸ் நிலையத்தை மூடி ‘சீல்’ வைத்தனர்.

இதையடுத்து ஆம்புலன்சில் சப்-இன்ஸ்பெக்டரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாலுகா போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தற்காலிக போலீஸ் நிலையம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாலுகா போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட உள்ளது.

சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டராக ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியில் சேர 15-ந்தேதி, அங்கிருந்து புறப்பட்டு வந்தார். அவருக்கு, வேலூரில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அவர், ஜோலார்பேட்டை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியில் சேர்ந்தார். அங்கு 3 நாட்களே பணிபுரிந்த அவருக்கு நேற்று காலை கொரோனா பரிசோதனை முடிவு வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் ஆகியோர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். அவருடன் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் உள்பட 16 பேரை நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள அக்ரஹாரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தினர்.

இதையடுத்து போலீஸ் நிலையம் முழுவதும் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையம் மூடப்பட்டது. தற்காலிக போலீஸ் நிலையம் சந்தைக்கோடியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story