மாவட்டத்துக்குள் இ-பாஸ் இல்லாமல் வந்ததாக 48 வழக்குகள் பதிவு - கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் இ-பாஸ் இல்லாமல் வந்ததாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் நேற்று மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் காவல்துறை அடங்கிய குழுவினருக்கான 20 சிறப்பு ரோந்து வாகனங்களை கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் முன்னிலையில், திருவண்ணாமலை போளூர் பிரதான சாலையில் வாகனங்களில் முகக்கவசம் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலித்து அதற்கான ரசீதுடன் முகக்கவசம் வழங்கப்பட்டது.
ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் கலெக்டர் கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 20 ரோந்து வாகனங்களில் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் சென்று முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது தொடர்பான தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
முகக்கவசம் அணியாமல் முதன் முறையாக கண்டறியப்பட்டால் ரூ.100 அபராதமும், அதே நபர் 2-வது முறையாக முகக்கவசம் அணியாமல் இருப்பது கண்டறியப்பட்டால் ரூ.500 அபராதமும், அதே நபர் 3-வது முறையாக முகக்கவசம் அணியாமல் இருப்பது கண்டறியப்பட்டால் காவல் துறையின் மூலம் கைது செய்யப்படுவார்கள்.
வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் ஆகிய இடங்களில் முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு மூடி ‘சீல்’ வைக்கப்படும்.
இதர மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களில் இருந்து எவ்வித அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் இ-பாஸ் அனுமதி பெறாமல் அதிக அளவிலான நபர்கள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, பொது நலன் கருதியும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும் இதர மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் இ-பாஸ் அனுமதி பெறாமல் வருகை தரும் நபர்கள் மீது காவல்துறையின் மூலம் வழக்குப்பதிவு செய்தும், கைது செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் இதர மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களில் இருந்து 2 நாட்களில் 410 பேர் இ-பாஸ் அனுமதி இல்லாமல் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர் கள் மீது காவல்துறை மூலம் 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்பட்டு, அனைவரின் மாதிரிகள் சேகரிக்கப் பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படாதவர்கள் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, முழுமையாக குணமடைந்தவுடன் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story